இந்திய நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிமாற்றம் முடங்கியது. வங்கி சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறிய வங்கிகளை இணைக்கக்கூடாது என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடந்தது. இதனால் வங்கி மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உள்பட அதிகாரிகள் நேற்று பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். எனினும் வங்கி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால், வங்கி சேவைகள் நேற்று முற்றிலும் முடங்கின. சில வங்கிகள் முன்பு போராட்டம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வங்கி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் ஆர்.சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை தலைவர் சிதம்பர குமார், சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். போராட்டம் குறித்து ஆர்.சேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- வங்கி அதிகாரிகளின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் மத்திய அரசு முரண்பாட்டை புகுத்துகிறது. ஆதார் திட்டங்கள் முதல் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகள் தொடங்குதல் என அரசின் திட்டங்களால் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமை உள்ளது. எனவே ஊதிய உயர்வு, பணிச்சுமை குறைப்பு, பணி பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 19 மாதங்களாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம். எனினும் அரசு செவிசாய்க்காததால் நாடு முழுவதும் 3 லட்சம் அதிகாரிகளும், தமிழ்நாட்டில் 27 ஆயிரம் அதிகாரிகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் முடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 4-வது சனிக்கிழமையான இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை. இதன் காரணமாக வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 24-ந்தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்றாலும், 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். 26-ந்தேதி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அன்றைய தினமும் வங்கி சேவைகள் பாதிக்கும் என தெரிகிறது.