யாழில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில்படுகாயமடைந்த வவுனியா மதகு வைத்த குளத்தை சேர்ந்த 26 வயதுடையை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மோதி விபத்துக்குள்ளான கிளிநொச்சி பரந்தனையை சேர்ந்த 08 வயது மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிளிநொச்சி விவேகானந்தா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 11ஆம் திகதி பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளை நோயாளர் காவு வண்டி மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்துக்குள்ளான மாணவியை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் நகரப்பகுதிக்கு அருகில் விறகு காலை வைத்திருக்கும் 71 வயதான வயோதிப மாது ஒருவர் நேற்று இரவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞன் ஒருவர் மோதிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த மூதாட்டி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மோட்டார் சைக்கிளால் வயோதிப மாதுவை மோதிய பின்னர் தொலைபேசியை தவறவிட்டு விபத்தை ஏற்படுத்தியவர் ஓடித் தப்பியதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் யாழ் லைடன் சந்திக்கு அருகில் நடைபெற்றுள்ளது.