உண்மையற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தலையிடும் நடவடிக்கை என்று இதனை சவூதி வெளியுறவு அமைச்சு விபரித்துள்ளது. எனினும் கடந்த வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானமானது பெரும்பாலும் ஓர் அடையாள நடவடிக்கையாக உள்ளதோடு சட்டமாவதற்கு வாய்ப்பு இல்லை.
செய்தியாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மீது குற்றம்சாட்டும் அமெரிக்க செனட் சபை தீர்மானத்திற்கு சவூதி கண்டனம் வெளியிட்டுள்ளது. யெமன் மீதான யுத்தத்தில் ஈடுபடும் சவூதிக்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்தவும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கையை எச்சரிப்பதாக செனட் சபையின் இந்த முடிவு உள்ளது.
“சவூதி அரேபியா நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும், வளைகுடா பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் சவூதி அரேபியாவுக்கு இருக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையிலும், போதிய ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை சவூதி அரேபியா அரசு நிராகரிக்கிறது.
மேலும், எங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது” என சவூதி அரேபிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி ஸ்தன்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட கசோக்கியின் கொலைக்கு சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மீது குற்றம்சாட்டும் தீர்மானம் செனட் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.