மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்வுசெய்யப்படும் மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதிக்கு உரியவை என்பதை ஆராய்வதற்காக, அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்டு மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் நீதவானின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மனித புதைகுழியிலிருந்து மேலும் 3 மாதிரிகளை சேகரிக்கவுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் சமிந்த ராஜபக்ஸ ஷமிந்த ராஜபக்ஸ மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன் நேற்று மூன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் செயலாளர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலரும் அகழ்வு இடம்பெறும் இடத்துக்கு சென்றுள்ளனர்.
குறித்த மாதிரிகள் கால நிர்ணயத்துக்காக அமெரிக்காவின் பீட்டா எனலைசிஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்படவுள்ளன.
கடந்த மே மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், மன்னார் மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் 279 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சதொச கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.