பிரான்சில் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் 20 வது ஆண்டு முத்தமிழ்விழா சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவனி லூதெம் என்ற பிரதேசத்தில் 15.12.2018 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலையில் ஒன்றான இன்னியம் அணியுடன் பிரதமவிருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எமது தாயகமக்களுக்கும், அதேநேரம் பிரான்சு மண்ணில் தம் தேசத்துக்காக உயிர் ஈந்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு. மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. மங்கள விளக்கினை சிறப்பு விருந்தினர்.பேராசிரியர். பாலசுகுமார் அவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழ்ச்சோலை தலைமைப்பணியக பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன், தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலகுமாரன், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவைப் பொறுப்பாளர் திருமதி அரியரட்ணம் நகுலேசுவரி அவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம், மாவீரர் பணிமனைத் துணைப்பொறுப்பாளர் திரு. பாக்கியநாதன், தமிழ் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி சுகந்தி இவர்களுடன் செவனி லூத்தெம் மாநகர முதல்வர் மகலின் மேரி லயஸ் பிசேறி அவர்களும் ஏற்றி வைத்தனர்.
தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்களால் பாடப்பட்டது. வணக்க நடனத்தை ஓன்லே சூபுவா மாணவிகள் வழங்கியிருந்தனர். வரவேற்புரையை தலைமைப்பணியக செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து மாணவர்களுடைய கலைவெளிப்பாடுகளான நடனம், நாடகம், தாளலயம்,வில்லிசை, ஊரக நடனம், நாட்டுக்கூத்து,எழுச்சிப்பாடல் நடனம்,காவடி என் பல கலைபடைப்புக்களை அனைத்து தமிழ்ச்சோலைகளும் வழங்கியிருந்தனர்
சிறப்புரைகளும், முதன்மை விருந்தினர் உரையும் இடம்பெற்றது முதலில் உரையாற்றிய மாநகர பிதா அவர்கள் தமிழர்களின் வாழ்வையும், தமிழ்மொழியின் பெருமையையும் தான் நன்கு அறிவேன் ஆனால் அவர்களுக்கேற்பட்ட துன்பத்தையும் தமிழர்கள் சுதந்திரமாக நிம்மதியாக தங்களுக்கென்று நாடு பெற்று வாழவேண்டும் என்பதிலும் தான் பெருவிரும் கொண்டவர் என்று தன்னை சந்தித்த தமிழ் பிரதநிதிகளிடம் அதற்காக தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தோடு தனது பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக பிரான்சு அரசுத்தலைவரிடமும் தமது வேண்டுகோள் விடுத்திருப்பதையும் கூறினார் தொடர்ந்து தமது மொழியை கலாச்சார பண்பாட்டை அழியவிடாது பாதுகாத்து வருகின்ற செயலை நிறுத்திவிடாது தொடர்ந்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் உங்கள் எல்லோரையும் பாராட்டுவதாகவும், உங்களோடு நானும் இருப்பது எனக்கும் மிகுந்த சந்தோசத்தையும், பெருமையையும் தருவதோடு உங்களால் தன்னுடைய இந்த மாநகரமும் பெருமையடைகின்றது என்றும் குறிப்பிட்டடிருந்தார்
சிறப்புரையை ஆற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் இன்று 20 வது ஆண்டினை நிறைவு கண்டிருக்கும் தமிழ்ச்சோலைப்பணியகத்தின் சோர்ந்து போகாத பணியும், உயர்வும், அர்பணிப்பான மொழிமீது கொண்ட பற்றுதலே இன்று இத்தனை விரூட்சமாக வளர்ந்து நிற்கின்றது என்றும், அதற்கு பின்னால் உழைத்த பணியாளர்கள், ஆசியர்கள், நிர்வாகிகள், எல்லாவற்றிக்கும் மேலாக பெற்றோருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றும், இன்று 20வது ஆண்டினை எட்டியிருக்கும் தமிழ்ச்சோலைத்தலைமைப்பணியம் அதன் கீழ் உருவாகிய தமிழ்ச்சோலை மாணவர்க்கு இன்று ஏறத்தாள 25, 26 வயதை எட்டியிருக்கும் என்றும் அவர்கள் இன்று பிரான்சு மண்ணிலே ஓர் சிறப்பான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமது கடந்த காலத்தை மறக்காது தமது மொழிக்காகவும், அதன் மண்உரிமைக்காகவும், தமது இனத்துக்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய பணியிருக்கின்றது என்றும் கூறியிருந்ததோடு. சமகால அரசியல் பற்றியும், வரும் ஆண்டில் மார்ச் மாத 4ம் திகதி ஜெனீவாப் பேரணி பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
முதன்மைவிருந்தினர் உரையை பேராசிரியர் வழங்கியிருந்தார். அவரும் தனது உரையில் இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை கண்ணுற்றதையும், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள் வழங்கிய தத்துருபமான நிகழ்வுகள் தன்னை மெய்சிலிர்க்க வைத்தது என்றும், எமது பாரம்பரியம் அழிந்து விடாது இனியம் என்ற எமது இசைஅசைவு நடனம் இங்கு தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டு 10 வது ஆண்டு என்றும் அதை கைவிட்டு விடாது தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு நாடு பிரான்சு நாடுதான் அதுவும் தமிழ்ச்சோலை பணியகம் மாத்திரமே என்று தனது பாராட்டுதல்களை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அழியவிடாது பாதுகாக்க வேண்டிய எமது வரலாற்றை ஓர் வீடியோ ஆவணமாக பல பகுதிகளாக தமிழில் தயாரிக்க வேண்டும் என்றும், அதனை முக்கியமா ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும், மொழிமாற்றம் செய்தால் அதிகமாக எமது அடுத்த தலைமுறை அவற்றை அறிந்து கொள்ள வழியேற்படும் என்றும் அதனை தான் முதலில் பிரெஞ்சு வாழ் தமிழ்மக்களின் உதவியோடு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் கடந்த 20 ஆண்டுகள் பற்றியதொரு விவரணம் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து தமிழ்ச்சோலைகளின் விபரம் அடங்கிய ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. தமிழச்சோலை நிர்வாகிகளுக்கான மதிப்பளித்தலும், திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளித்தல், தமிழிலும், தமிழக்கலை 10,12,25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், வளர் தமிழ் 12 சித்திபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளித்தலும் நடைபெற்றது. இந்த மதிப்பளித்தலை தமிழ்ச்சோலை தலைமை பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்களும், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை பொறுப்பாளர் திருமதி. நகுலேசுவரி அரியரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினர் பேராசிரியர் திரு. பாலசுகுமாரன் அவர்களும், மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
20 வது ஆண்டில்
தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். நல்வாய்ப்பு சீட்டிழுப்பும் நடாத்தப்பட்டது. தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுடன் காலை சரியாக குறித்த நேரத்தில் தொடங்கப்பட்ட முத்தமிழ்விழா சரியாக இரவு 21.00 மணியளவில் நம்பிக்கை தரும் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிறைவு பெற்றது. இன்றைய நாள் கடும் குளிரும் பருவமாற்றத்தால் ஏற்பட்ட அடை விடா மழைக்கு மத்தியிலும் மண்டபம் இருக்கைகள் மக்களால் நிறைந்து போயிருந்தது.