காரைநகரில் அமைக்கப்பட்டிருந்த வேணன் உவர்நீர்த்தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேசத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு தடுப்பணை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கிய நாள் முதல் இதுவரை காலமும் தேங்கியிருந்த நன்னீர் குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சிலரினால் குறித்த தடுப்பணை உடைக்கப்பட்டமையால் நேற்று முதல் நன்னீர் கடலுக்குள் சென்று கொண்டிருப்பதுடன் நீர்மட்டமும் குறைந்துள்ளது.
எனவே சேகரிக்கப்பட்ட நீர் கடலுக்குள் சென்றமையால் எதிர்வரும் ஆண்டு பொதுமக்களுக்கு தேவையான நீருக்கு தட்டுப்பாடு நிலவும். இதனைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தும் நோக்குடன் தடுப்பணையினை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.
வடக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்காலிகமாக நன்னீர் கடலுக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கைகளை வட மாகாண நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியன இணைந்து இன்றே ஆரம்பித்துள்ளன.
இது குறித்து வடக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் தெரிவிக்கையில், காரைநகர் பொன்னாலை பாலத்தின் வலதுபக்கத்தில் 2.1 கிலோ மீற்றர் அளவிற்கும் இடதுபக்கத்தில் 3.2 கிலோ மீற்றர் அளவிற்கும் வேணன் உவர்நீர்த்தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குடிநீர்ப்பற்றாக்குறையினை தீர்க்கும் நோக்குடன் உறுப்பினர் தியாகராஜா களிமண்ணினால் அணைக்கட்டினை அமைத்திருந்தார். அவை காலப்போக்கில் அழிந்து போயின. அதனையடுத்து ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் கவனிப்பின்றியிருந்த தடுப்பணை கடந்த வருடம் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டு 23 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.
இதனூடாக மழை நீர் சேமிக்கப்பட்டு குறித்த கிராமத்திற்கு தேவையான நீர் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரங்களாக பெய்து வரும் மழையினால் வெள்ளம் சிலரது வீடுகளுக்குள் புகுந்து கொண்டது. அதனையடுத்து குறித்த தடுப்பணை சில விசமிகளால் வெட்டப்பட்டது.
எனவே இவ்வாறான செயற்பாட்டினால் அடுத்த ஆண்டுக்கு தேவையான நன்னீர் இல்லாமல் போவதுடன் குடிநீருடன் கடல் நீர் கலப்பதனால் கிணற்று நீர் உப்பு நீராகவும் மாறும். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருப்பதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே நன்னீரை தற்காலிகமாக பாதுகாக்க மண்மூடைகள் போடுவதற்கான நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் முற்றாக தடுப்பதற்கு நிரந்தர அணையினை அமைப்பதற்கும் நவடிக்கைகளை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, தடுப்பணை உடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் குடி தண்ணீருக்கு தாம் கஷ்ரப்பட வேண்டும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.