சனிக்கிழமைப் போராட்டங்களின் போது RIC என்ற மூன்றெழுத்துக்கள் பொறித்த சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தூக்கிப்பிடிப்பதை பரவலாக எங்கும் காணமுடிகிறது. மக்கள் கோரிக்கைகள் அனைத்துக்குமான அடிப்படைத் தீர்வாக இந்த மூன்றெழுத்துக்களை முன்வைக்கும் கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள் மஞ்சள் மேலங்கியினர்.
‘மக்களே முன்னெடுக்கும் சர்வசன வாக்கெடுப்பு’ (Référendum d’initiative citoyenne – RIC) என்பதே இந்த மூன்றெழுத்துக்கள் குறிக்கும் வடிவம். ‘இறைமையின் பங்கை மக்களிடம் மீளத் திருப்பித் தருதல்’ என்று அவர்கள் இதனை அர்த்தப்படுத்துகிறார்கள்.
சட்டவரைவுகளை முன்வைக்கும் போதும் அமுல் செய்யும் போதும் அல்லது, மக்களைப் பாதிக்கும் பொதுவிடயங்களிலும், அரசமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருகின்ற சந்தர்ப்பங்களிலும் அது தொடர்பில் மக்கள் கருத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வசதியாக சர்வசன வாக்கெடுப்புகளை நடத்தும் முறைமை பல நாடுகளிலும் காணப்படுகின்றது. ஆனால் தேர்தல்களில் தாங்கள் தெரிவுசெய்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கத்தக்கதாக, மக்கள் தாங்களாகவே இப்படி ஒரு வாக்கெடுப்புக்கான நகர்வை முன்னெடுக்க அனுமதிக்கும் உரிமை சுவிற்சர்லாந்து போன்ற ஒரு சில நாடுகளிலேயே அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு சர்வசன வாக்கெடுப்பு உரிமையையே பிரான்ஸில் மஞ்சள் மேலங்கியினர் கோரி நிற்கின்றனர்.
பொது விடயம் ஒன்றில் சுமார் 2 இலட்சம் பேரின் ஒப்பங்களை ஆதரவாகப்பெற்று, அதனை மக்கள் கருத்துக்கணிப்புக்கு கொண்டு செல்லக்கூடிய உரிமை சுவிஸ் கன்ரன்களின் மக்களுக்கு இருக்கின்றது.
இதற்கு ஒர் உதாரணம்-
சுவிஸின் உல்லாசத்துறை அடையாளங்களில் மாடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன. விவசாயப் பண்ணைகளில் பாதுகாப்புக்காக மாடுகளின் கொம்புகளைப் பிடுங்கி அகற்றிவிடும் நடைமுறை நீண்டகாலமாக அங்கு உள்ளது. அதற்கு எதிராக விவசாயி ஒருவர் தனித்து முன்னெடுத்துவந்த நீண்ட போராட்டம், 2 இலட்சம் சுவிஸ் மக்களின் ஆதரவுக் கையொப்பங்களுடன் அண்மையில் கருத்துக்கணிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாட்டுக் கொம்பு விவகாரத்தில் மக்களின் விருப்புவெறுப்பை அறிய வாக்களிப்பும் நடத்தப்பட்டது. இதேபோன்று வெளிநாட்டுச் சட்டங்களுக்கா அன்றி உள்நாட்டுச் சட்டங்களுக்கா முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற வேறு ஒரு விடயம் கூட அண்மையில் அங்கு மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டது.
இத்தகைய, சர்ச்சைக்குரிய, பொதுசன வாக்கெடுப்பு உரிமையை அரசமைப்பினுள் உள்வாங்கும் விடயம் குறித்தே இப்போது பிரான்ஸில் பேச்சேழுந்திருக்கிறது. எதிரணியில் தீவிர வலது சாரியான மரின் லூ பென் அம்மையாரும், ‘அடிபணியாத தேசம்’ என்ற அர்த்தத்தில் ஒர் இடதுசாரிக் கட்சியை வழிநடத்தும் மூத்த அரசியல்வாதியான Jean-Luc Mélenchon அவர்களும் இந்த மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு முறையை ஆதரிக்கின்றார்கள்.
சில சர்வசன வாக்கெடுப்பு முறைகள் பிரெஞ்சு அரசமைப்புகளில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் அரசுத் தலைவரால்,அல்லது நாடாளுமன்றப் பெரும்பான்மையால் மட்டுமே முன்னெடுக்கப்படக்கூடியவை. மாறாக மக்களால் தொடக்கப்படக்கூடிய கருத்துக்கணிப்பு முறை ஒன்றைத்தான் மஞ்சள் இயக்கத்தினர் இப்போது கோருகின்றனர். இது பற்றிய தங்கள் உத்தேச திட்டத்தை முகநூல்களிலும் ஊடகங்களிலும் வெளியிட்டிருக்கின்றனர்.
(நன்றி – முகநூல்)