பிரான்ஸின் ஸ்ரார்ஸ்பூக் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பித் தலைமறைவாகியிருந்த நபர் பொலிஸாரின் முற்றுகையில் கொல்லப்பட்டிருக்கிறார்.
கடந்த இரு தினங்களாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய பொலிஸாரால் சல்லடைபோட்டு தேடப்பட்டு வந்த Cherif Chekatt, 29, என்னும் தாக்குதலாளி, ஸ்ரார்ஸ்பூக் பகுதியில் Neudorf என்னும் இடத்தில் நேற்று முன்னிரவு பொலீஸ் முற்றுகைக்குள் சிக்கினார் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரான்ஸின் வடகிழக்கில் – ஜேர்மனி எல்லையோரம் – அமைந்துள்ள முக்கிய நகரம் ஸ்ரார்ஸ்பூக். ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்றத்தின் அமைவிடமான இந்த நகரில் வருடாந்த நத்தார் சந்தையில் கடந்த செவ்வாய் இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் மூளைச்சாவடைந்த நிலையில் உள்ளார். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு, கையில் காயமடைந்த நிலையில் டாக்ஸி ஒன்றில் பலாத்காரமாக ஏறித்தப்பிச் சென்று தலைமறைவாகிய Cherif Chekatt, எல்லை தாண்டி ஜேர்மனிக்குள் தப்பியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இதனால் இரு நாட்டுப் படைகளும் கூட்டாக பெரும் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தன.