நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 10 மணியளவில் தலைமன்னார் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா என்றும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது –
தலைமன்னார் மேற்கு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், வெளிநாட்டிலிருந்து வந்து மன்னாரில் தங்கியிருந்த தெரிந்தவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் உள்ள பள்ளத்தில் ஒன்றைத் தவிர்ப்பதற்காக திடீரெனத் திருப்பியபோதே அது தடம்புரண்டு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நடைபெற்று நீண்டநேரத்துக்கு பின்பே அவ்வழியாகச் சென்ற ஒருவர் இவர்களைக் கண்டு அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்தார்
இச்சம்பவத்தில் பிரான்ஸிஸ் பிரான்சிஸ்கா றோசலீன் குரூஸ் (வயது 83) என்ற மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதியும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.
தெய்வாதீனமாக அவர்களது 7 வயதுப் பிள்ளை காயமின்றித் தப்பிக்கொண்டது. பிரான்ஸிஸ் ததேயு செல்வம் கூஞ்ஜ் (வயது 34) அவரது மனைவி ததேயு செல்வம் அந்தோனிக்கம் வின்சன்டா வினோதினி (வயது 33) ஆகியோர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வினோதினி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.