தமிழர்தாயகம் எங்கணும் மாவீரர்நாளில் ஒளியேற்றித் தமிழரின் இருண்ட காலத்திற்கு விடைகொடுத்திருக்கிறது ஈழத்தமிழினம்.
:- வி மோகனதாசன்
ஊடக பிரிவு
தமிழீழ மக்கள் பேரவைபிரான்சு
தமிழின அழிப்பினாலும் அவர்களது விடுதலை வேட்கையினை ஒருபோதும் தடுத்துவிடமுடியாது என்பதனைப் பேரெழுச்சியுடன் மீண்டெழுந்துள்ள தமிழர்கள், ஒன்றிணைந்து ஒரே குரலில் உலகுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சிங்களப் படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகப்பகுதிகளில் உயிர் அச்சுறுத்தலுக்கும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் சாவுக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு மக்கள் அடக்கி வைத்திருந்த உணர்வெழுச்சி பீறிட மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.
வானில் இருந்து எங்கெல்லாம் குண்டுகளைப்போட்டுத் தமிழீழத்தின்
எல்லைகளை வரையறுத்த சிங்கள தேசத்திற்கு, அங்கெல்லாம்
மக்கள் மாவீரர்களுக்கு ஒளித்தீபங்களை ஏற்றி வணங்கினார்கள்!
அடிபணியாத வீரத்தோடு களமாடிய வீரவேங்கைகளை விதைத்த அடங்காமண், துயிலுமில்லங்கள் நோக்கி மக்கள் அணிவகுத்தபோது சிலிர்த்துக்கொண்டது.
தமிழர்கள் ‘தேசமாக ‘ மீண்டெழுந்ததைக் கண்டு சிங்களதேசம் கதிகலங்கிப் போனது.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலோடு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக இறுமாப்போடு இருந்த சிங்களதேசத்தின் தலையில் மீண்டும் இடிவிழுந்திருக்கிறது. சர்வதேசமும் தமிழரின் புதிய எழுச்சிகண்டு மூக்கில் விரலை வைத்து அதிசயித்துப் போயுள்ளது. மக்கள் மீள் எழுச்சியின் முக்கியத்துவம் கருதி சர்வதேச ஊடகங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
உலகமெங்கணும் வாழும் தமிழர்களும் உணர்வுகளால் ஒன்றாகவே வாழ்கின்றனர் என்பதனைப் பறைசாற்றுவதுபோல தமிழகத்திலும் புலத்திலும் ஏனைய தமிழர்கள் வாழும் நாடுகளிலும் மாவீரர்களை நினைவுகூர அலையலையாக மக்கள் திரண்டனர். உலகமெங்கணும் வாழும் தமிழர்களை, மாவீரர்களின் நினைவுகள் ஒரேநாளில் ஒன்றிணைத்துவிடும் அற்புதம் நிகழ்ந்து விடுகிறது.
விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாதிகள் என்னும் முத்திரையினைக் குத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக்கூறிச் சர்வதேச நாடுகளினது முண்டுகொடுப்புகளுட ன் சிங்கள அரசு, அரசபயங்கரவாதத்தை ஏவி மக்களைக் கொன்றொழித்தது. மக்கள் அழிவினால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மக்களின் வெறுப்புத் திரும்புமென்று சிங்கள அரசு தப்புக் கணக்குப் போட்டது. ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து நடந்ததோ வேறு!
“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப்போராளிகள். அவர்களே தமது உண்மையான பாதுகாவலர்; பிரதிநிதிகள்” என்பதை ஐயத்திற்கு இடமின்றி தமிழ்மக்கள் மீண்டும் சிங்கள அரசுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்களின் உணர்வினை மதித்து சர்வதேசநாடுகள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டிய காலம் கனிந்திருக்கிறது.
அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து படுகொலைகளையும் ஈவிரக்கமற்ற முறையில் குரூரமான சித்திரவதைகளைப் புரிந்த சிங்கள இனவாத அரசின் இறையாண்மையினைக் காப்பதில் கரிசனைகாட்டும் சர்வதேச அரசுகள், ஒடுக்கப்படும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அலட்சியமாக நடந்து கொள்கின்றன. சிங்கள அரசினது மட்டுமல்ல சமாதானம் பேசவந்த நாடுகளின் முகமூடிகளும் இன்று கிழிந்துள்ளன.
தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தனது 2008 தேசிய மாவீரர்நாள் உரையில், துல்லியமாகத் தொலைநோக்குப் பார்வையுடன், “ இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல புலிகளுக்கு எதிரான போரன்று. தமிழின அழிப்பை இலக்காகக் கொண்டபோர்; மொத்தத்தில் இது ஓர் இனவழிப்புப் போர். “ என்று குறிப்பிட்டார்.
ஆனால் இந்த எச்சரிக்கையைச் சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை. இதன்விளைவு இலட்சக்கணக்கான தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள். அவையவங்களை இழந்தனர்; ஆயிரக்கணக்கானவர் காணமலாக்கப்பட்டனர்; கொடுஞ் சிறைகளுக்குள் தள்ளப்பட்டனர்.
இராணுவத்தீர்வில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ள சிங்கள அரசு, “ தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர்தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்” என்றார் தேசியத்தலைவர்.
போர்முடிவுக்கு வந்து ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின்னரும் இன்று வரை, தமிழருக்கு எந்தவிதமான தீர்வுகளையும் வழங்காமல் இராணுவ ஒடுக்குமுறைக்குள் தொடர்ந்தும் அடக்கியாளுதலே அரசின் நோக்கம் என்பதை எவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
நல்லாட்சி அரசின் அரசுத்தலைவர் எனச் சொல்லப்பட்ட மைத்திரிபால சிறீசேனா, “வடகிழக்கு இணைப்போ, சமஷ்டியோ தனது பிணத்தின் மீது ஏறிச்சென்றே அடையமுடியும்” என்று இறுமாப்போடு திருவாய் மலர்ந்துள்ளார்.
சிங்கள ஆட்சியாளர்களின் நயவஞ்ச அரசியலை பலதடவைகள் தேசியத்தலைவர் அவர்கள் தோலுரித்துக் காட்டியுள்ளார், இருபெரும் கட்சிகளில் இருந்து, ஆட்சியாளர்களாக எவர் வந்தாலும் தமிழரின் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. மாறாக தமிழரின் பிரச்சனையை வைத்தே தங்களது இனவாத ஆட்சியினைத் தக்கவைப்பதில் தீவிரம் காட்டுவர்.
இணக்க அரசியல் பேசி இலட்சியத்தை சிங்கள அரசிடம் அடகுவைத்து வயிறு வளர்க்கும் தமிழ்த்தலைமைகள் இனியாவது திருந்துங்கள்! இல்லையேல் மக்களால் விரட்டி அடிக்கப்படுவீர்கள்!