சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் டீசல் மீதான வரி கணிசமாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக 12 மாதங்களில் 23 சதவீத அளவுக்கு விலை உயர்ந்தது.இதை எதிர்த்து அங்கு மஞ்சள் சட்டை இயக்கத்தினர் மாபெரும் போராட்டத்தை கையில் எடுத்தனர்.
இவர்கள் கடந்த 1-ந் தேதி சனிக்கிழமை பாரீஸ் நகரில் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பொதுச்சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.தொடர்ந்து இந்த போராட்டம் வலுத்து வந்ததால், அவர்களின் போராட்டத்துக்கு அங்குள்ள அரசு பணிந்தது. வரி உயர்வை நிறுத்தி வைத்தது.ஆனால் இது போன்ற அரசின் பல கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் தொடர்ந்தது. இது அந்த நாட்டு அரசுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.இந்தநிலையில் இன்று பாரீஸ் நகரில், தீவிர வலது சாரி இயக்கத்தினரும், இடது சாரி இயக்கத்தினரும் மாபெரும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின்போது அங்கு வன்முறை மூளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சக உயர் அதிகாரி பிலிப்பி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “பாரீஸ் நகரில் சனிக்கிழமை (இன்று) தீவிர வலது சாரி இயக்கத்தினரும், இடது சாரி இயக்கத்தினரும் நடத்துகிற போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டம் போட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.இதையொட்டி, பாரீஸ் நகரில் 8 ஆயிரம் போலீசார் நிறுத்தப்படுவர்; ஒரு டஜன் கவச வாகனங்களும் நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் எட்வர்டு பிலிப்பி அறிவித்துள்ளார்.இன்றைய போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக திகழ்ந்து வருகிற ஈபிள் கோபுரம் இன்று மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “சனிக்கிழமையன்று நடக்கிற போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளதால், போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது” என குறிப்பிட்டார்.பாரீஸ் நகருக்கு வருகிற சுற்றுலாப்பயணிகள் ஈபிள் கோபுரத்தை பார்க்க வர தவறுவதே இல்லை. ஆண்டுக்கு 55 லட்சம் பேர் ஈபிள் கோபுரத்தை பார்க்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோன்று சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவருகிற லூவர், ஓர்சாய் மியூசியங்கள், ஓபரா இல்லங்கள், கிராண்ட் பாலாயிஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று பிரான்ஸ் கலாசாரத்துறை மந்திரி பிராங்க் ரீஸ்டெர் அறிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “அச்சுறுத்தல் உள்ளது என்று நாங்கள் அறிந்திருக்கும் வேளையில் தேவையற்ற ஆபத்தை தேடிக் கொள்ள விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.முன்னணி உணவகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் மூடி விடும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பாரீஸ் நகரில் இன்று நடக்கவிருந்த கால்பந்து போட்டிகளும் ஒத்தி போடப்பட்டுள்ளன.