வைத்தியர்கள் போல் வேடமிட்டு, யாழ் போதனாவைத்தியசாலைக்குள் பிடிபட்ட திருடிகள்!

0
290

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களை போல வேடமிட்டு நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிசிரிவி கமரா காட்சிகளின் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள் போல உடையணிந்து, கழுத்தும் இதயத்துடிப்பு காட்டியுடன் இவர்கள் வைத்தியசாலைக்குள் சர்வசாதாரணமாக திரிந்துள்ளதுடன், ஒருவர் சத்திரசிகிச்சைகூடத்திற்குள், சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆடையுடனும் நுழைந்து அங்கும் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தபோது-

“மருத்துவர்களை போல பாசாங்கு செய்து திருட்டில் ஈடுபட்ட பெண்களை பிடிக்க முயன்றபோதும், இரு பெண் ஊழியர்களே அங்கு நின்றதை பயன்படுத்தி ஒருவர் தப்பியோடி விட்டார்.

இரண்டாம் நபர் பிடிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, வைத்தியசாலைக்குள் பல திருட்டுக்களில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அதில் வைத்தியசாலையின் பாவனையிலிருந்த முக்கியமான ஒரு பொருளும் உள்ளடக்கம்.

அதனை எடுத்து வர, எமது பெண் ஊழியர் ஒருவருடன் அவரை அனுப்பி வைத்தோம். அவரது கைத்தொலைபேசியை வாங்கி வைத்துவிட்டே அனுப்பினோம். இதற்குள், தப்பியோடி பெண் தகவல் கொடுத்து, எமது பிடியிலிருந்த பெண்ணின் காதலன் வந்துவிட்டார். அவர் மோட்டார்சைக்கிளில் வர, எமது பிடியிலிருந்த பெண் வேகமாக ஓடிச்சென்று மோட்டார்சைக்கிளில் ஏறிவிட்டார். அவர்கள் தப்பித்து விட்டனர்.

இருப்பினும், அவரது கைத்தொலைபேசி எம்மிடமே உள்ளது. அந்த தொலைபேசியில் அம்மா என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தை தொடர்பு கொண்டோம். அவரது தாயார் மட்டக்களப்பில் இருந்து பேசினார். தனது மகள் மருத்துவக்கல்வி கற்பதாகவும், யாழ் போதனா வைத்தியசாலையில் பயிலுனராக இருப்பதாகவும் சொன்னார்.

அந்த இளம்பெண் மருத்துவமனை, இங்கு வரும் நோயாளர்களை மட்டும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவில்லை. தனது பெற்றோரையும் ஏமாற்றியிருக்கிறார்.

அதேநேரம், அந்த யுவதியை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்ற காதலனை தெளிவாக அடையாளம் கண்டுள்ளோம். அந்த பெண்ணின் தொலைபேசியில் இருவரது புகைப்படங்களும் தாராளமாக உள்ளன. அந்த படங்களின் உதவியுடன் அந்த இளைஞரை தேடியபோது, அவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதும், தற்போது சுன்னாகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் என்பதும் தெரிய வந்தது.

அதேபோல, பலநாளாக வைத்தியசாலைக்குள் நோயாளர்களை ஏமாற்றி தங்க நகைகளை அபகரித்த மற்றுமொரு பெண்ணையும் பிடித்தோம். நாம் பிடிப்பதற்கு முதல்நாளும், இன்னொரு பெண்ணிடம் அவ்ர் நகைகளை அபகரித்தார். அவர் குழந்தை பிரசவித்து 30 நாள்தான் ஆகிறது. குழந்தையுடன்தான் பிடிபட்டார். அவரை விசாரித்ததில். மல்லைத்தீவு அளம்பில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

மிருசுவிலில் உள்ள இரண்டு பெண்களிடமே களவாடும் நகைகளை கொடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த அனைத்து விடயங்களும் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன“ என்றார்.

சாதரணமாக சத்திரசிகி்ச்சைக் கூடத்துக்குள் வெளிநபர்கள் செல்ல முடியாது. அத்துடன் அங்கு கடமையில் இருப்பவர்களுக்கு யார் தங்களது ஊழியர்கள் என தெரியவரும். இவ்வாறான நிலையில் சத்திரகூடத்தினுள் ஒரு திருடி நுழைந்தார் என்று கூறுவது  சந்தேகத்தை வரவழைப்பதாக போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here