மன்னார் சிலாபத்துறையில் மண்ணுள் சிக்குண்ட ஒருவர் பலி!

0
186

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பத்தலைவர் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார்.
மன்னார் சிலாபத்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.

மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் சென்றனர்.

அவர்கள் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிய பின்னர் அதனை சிலாபத்துறைக்கு கொண்டு சென்றனர். அதன் போது வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் 3 உதவியாளர்கள் முன் இருக்கையில் இருந்துள்ளனர்.

5ஆவது நபர் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றப்பட்ட பகுதிக்கு மேல் ஏறி படுத்துள்ளார். டிப்பர் வாகனம் குஞ்சுக்குளத்தில் இருந்து சிலாபத்துறை நோக்கி சென்ற நிலையில், சிலாபத்துறை பகுதியில் உரிய இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது.

இதன் போது மண் மீது எறி படுத்தவர் உறக்கநிலைக்குச் சென்றுள்ளார். அதனால் பறிக்கப்பட்ட மண்ணுக்குள் அவர் சிக்குண்டுள்ளார்.

மண் கொட்டப்பட்ட நிலையில் மீண்டும் டிப்பர் வாகனமும் அதில் பயணித்தவர்களும் குஞ்சுக்குளம் பகுதிக்குச் சென்ற நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் ஏனைய மூவரும், குறித்த நபரை தேடிய போது அவர் அங்கே இருக்கவில்லை.

மீண்டும் மண் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போது, அவர் அங்கே மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அந்தக் குடும்பத்தலைவரை மீட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கெண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.

சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருடையது என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை மற்றும் முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here