ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் ஹொலியங்ஸூ அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும்
நான்காம் திகதி இலங்கை வரவுள்ள ஐ.நா. பிரதிநிதி 10 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பதுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முதன்மைப்படுத்தப்பட்ட உடனடி அபிவிருத்தி தேவைகளுக்கு உதவுதல் தொடர்பாக ஹொலியன் ஸூவின் இலங்கைக்கான இரண்டாவது பயணத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர் ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகம் ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக்குழு தலைவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகி மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய பணியக பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின்போது பல உயர் மட்ட அரச உத்தியோகத்தர்கள் அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் புதிய அரசியல் சூழல் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
ஐ.நா. அபிவிருத்தி நிகழச்சித்திட்டம் மற்றும் ஏனைய ஐ.நா. நிறுவனங்களின் எதிர்கால உதவிகளை உறுதி செய்வதுடன் குறிப்பாக ஐ.நா. நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக பலப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். அரச அதிகாரிகளையும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதுடன் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவிகளுடனான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்யவுள்ளார்.