பிரான்சில் துறோவா மாநகரத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்!

0
740

தமிழீழ தேசிய மாவீரர்களை தங்கள் மனதில் சுமந்து பிரான்சு நாட்டின் ஒரு மாநிலமான துறோவா என்னும் நகரத்தில் அங்குவாழும் தமிழீழ மக்களினால் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக மாவீரர்களை நினைவுகூரப்பட்டது. மதியம் மஞ்சள் சிவப்பு எழுச்சி நிறங்களாலும் முதற்களப்பலியான லெப். சங்கர் முதல் 40 வரையான மாவீரர் தளபதிகளின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு கார்த்திகைப்பூக்களாலும், றோசாமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மதியம் 2.30 மணிக்கு மாவீரரின் பெற்றோர் பொதுச்சுடர் ஏற்றி வைத்தனர். அகவணக்கத்துடன் மாவீரர் துயிலும் இல்லப்பாடலுடன் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, ஏனைய மாவீரர்கள் சகோதர உறவுகளும் சுடர்ஏற்ற சூரியத்தேவனின் வீரர்களே பாடலுடன் பொதுமக்கள் இளையவர்கள் குழந்தைகள் சுடர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பாரிசிலிருந்து மாவீரர் நினைவையும், நிகழ்வையும் மகிமைப்படுத்த இந்நிகழ்வில் மாவீரர்பாடலுக்கும், நாம் ஒருநாளும் வீழ்ந்து விட மாட்டோம் என்ற உறுதிப்படுத்தும் வகையில் நடனத்தையும், தமிழினத்தின் ஒரே ஆதாரபுருசன் மிகப்பெரும் சக்தியுமாகிய தமிழீழ தேசத்தின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள்தான் என்பதையும் வெளிபடுத்தி தேசியத்தலைவரின் பாடல்களுக்கு நடனம் வழங்கியிருந்தனர். மாவீரர் பாடல்களையும், விடுதலைப்பாடல்களையும், தேசியத்தலைவர் பாடல்களையும் தேசப்பாடல் பாடகர் திரு. கிருபா அவர்கள் உணர்வு பூர்வமாக வழங்கியிருந்தார். சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். இந்த பிரதேசம் ஒருகாலத்தில் எமது தேச விடுதலைக்காகவும், மனிதநேயப்பணிக்காகவும், அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கு மிகுந்த பங்கையாற்றியிருந்ததையும் எதிர்பாராத விதமாக இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தேசம்நோக்கிய பயணிப்பில் தடங்கலை ஏற்படுத்தியிருந்தாலும் மீண்டும் அது இந்த வருடம் இன்னும் சிறப்பாக இளையவர்களின் முன்னெடுப்பினால் இந்த தேசிய நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்ததோடு சமகால அரசியல் நிலைப்பாட்டினை தெரிவித்ததோடு தாயகமக்களோடு இணைந்து புலம்பெயர்ந்த உறவுகளும் வரும் மார்ச் மாதம் 11ம் நாள் ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக நடைபெறவுள்ள பேரணியில் துறோவா வாழ் மக்கள் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு எமது சந்ததியின் நல்வாழ்வுக்காக தங்கள் இன்னுயிரை நிறுத்திக்கொண்டவர்களுக்கு சுடரும், மலரும் ஏற்றி வணக்கம் செலுத்துவதோடு நின்றுவிடாது எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்த பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த தமிழ்ச்சோலைப்பாடசாலை கடந்த சில காலங்களாக தடைப்பட்டு நிற்பது வேதனைக்குரியது என்றும் அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இங்கு வாழும் இளையவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் எல்லோருக்கும் உண்டு என்றும் கேட்டுக்கொண்டார். நிறைவில் உரையாற்றிய பெண் உணர்வாளர் ஆசிரியர் எல்லோருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு நடைபெற்ற அனைத்து நிகழ்வையும் பார்த்து கண்ணீர் விட்டதையும் மாவீரர்கள் நினைவை மனதில் சுமந்துள்ள நாங்கள் இன்னும் அவர்களை நினைத்து உருக இந்த ஏற்பாட்டைச் செய்து எல்லோரையும் ஒன்றாக்கி வைத்த இளையவர்களை பாராட்டியதுடன் அவர்கள் கரங்களை தொடர்ந்து எல்லோரும் பலப்படுத்த வேண்டும் என்றும் பாரிசில் இருந்து பல கிலோ மீற்றர் தூரம் குறித்த நேரத்தில் நிகழ்வில் வந்து கலந்து கொண்டு தம்மை உற்சாகப்படுத்தியவர்களுக்கு துறோவா மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்திருந்தார். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரகமந்திரத்துடன் தேசிய மாவீரர் நாள்  நிகழ்வு 18.00 மணிக்கு நிறைவு பெற்றது. நாட்காட்டிகள், தமிழீழத்தேசியக்கொடி, இறுவெட்டுக்கள், வெளியீடுகள் மக்கள் முந்தியடித்து பெற்றுக்கொண்டமையும், பல பொருட்கள் போதாமையாகியிருந்தது. வெளியீடு செய்தவர்கள் எதிர்பாராதவிதமாக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போனதைக் காணக்கூடியதாக இருந்தது. வந்த மக்களுக்கு சிற்றுண்டி தேநீர் வழங்கி விருந்தோம்பல் செய்திருந்தனர். மண்டபம் நிறைந்த மக்கள் இந்த மாவீரர் நிகழ்வில் தேசபற்றுடன், இது தமது குழந்தைகளுக்கும், இனத்துக்கும் செய்யும் கடமையாகவே உணர்வு பொங்க தங்கள் குடும்பங்கள் சகிதராக நின்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here