பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

0
209

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் இன்னுமும் விடுதலை செய்யப்படாமலுள்ள  பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இன்று ஆளுநர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று  நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட  ஏனைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த வைகோ, 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுனர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here