முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தாக்குதலிற்குள்ளாகி படுகாயமடைந்த விசேட அதிரடிப்படை சிப்பாய் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இச்சம்பவத்தினில் காவல்துறை அதிகாரியொருவர்; உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து அவர்கள் நால்வரும் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கெருடமடுவில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை; வீடுபுகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நால்வரின் கை, கால்களை கட்டிவிட்டு, வீட்டு உரிமையாளரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு 20 லட்சம் ரூபாய் பணத்தையும் 13 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச்சென்றிருந்தனர். காயமடைந்த வீட்டு உரிமையாளர் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் கொள்ளையர்களினில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
இந்நிலையினில் அவர் உயிரிழந்த நிலையினில் சடலத்தை கொள்ளையர்கள் கும்பல் ஒட்டுசுட்டான் பெரிய இத்திமடு காட்டுப்பகுதியினில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த காவல்துறை அதிகாரி முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றினார் எனவும் தற்போது இடமாற்றலாகி மட்டக்களப்புக்கு சென்றுவிட்டார் எனவும் வழக்கு ஒன்றுக்குச் சாட்சியமளிக்க முல்லைத்த்தீவுக்கு அவர் வந்திருந்த நிலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.