யெமன் யுத்தத்தில் ஈடுபடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவை வாபஸ் பெற அந்நாட்டு செனட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆதரவை நிறுத்துவதற்கு செனட் சபையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 63–37 என ஆதரவு கிடைத்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்றும் அது யெமனின் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றும் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸ் வலியுறுத்தி இருந்தனர்.
அமெரிக்க குடியிருப்பாளரும் சவூதி பிரஜையுமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் வைத்து கசோக்கி கொல்லப்பட்டது குறித்து சவூதி அரேபியா மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சவூதி அரேபியாவுடனான உறவுகள் பற்றி புதனன்று மூடிய அறையில் கூடிய செனட் உறுப்பினர்கள், அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை பணிப்பாளர் வருகை தராதது குறித்தும் கடும் கண்டனத்தை வெளியிட்டனர்.
கசோக்கியின் கொலை தொடர்பாக துருக்கி வழங்கிய ஓடியோ பதிவை செவிமடுத்த சி.ஐ.ஏ. தலைவி கினா ஹஸ்பல் இந்த விடயம் தொடர்பிலான ஆதாரங்களை திரட்டி வருகிறார். அவர் வருகை தராதது மூடிமறைக்கும் வேலை என்று ஒரு செனட் உறுப்பினர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் செனட் வாக்கெடுப்பு, சவூதி அரேபியா முக்கிய நட்பு நாடு என்று கூறும் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. சவூதி தலைவர்கள் மீது தடைகள் கொண்டுவருவதையும் அவர் நிராகரித்து வருகிறார்.
கசோக்கி கொலையின் பின்னணியில் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் இருப்பதாக கூறும் சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றையும் டிரம்ப் நிராகரித்திருந்தார்.
செனட்டில் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பு மூலம் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு குறித்து அடுத்த வாரமும் விவாதம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானம் செனட்டில் நிறைவேற்றப்பட்டபோதும் அதற்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் கிடைப்பதற்கு குறைந்த அளவான வாய்ப்பே இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யெமன் அரசை மீண்டும் நிறுவும் முயற்சியாக சவூதி தலைமையிலான அரபுக் கூட்டணி 2015 ஆம் ஆண்டு தலையிட்டது தொடக்கம் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.