வீரமறவர்களை நினைவேந்த
ஒன்றுதிரண்ட தமிழ் உறவுகள்
கொழுந்துவிட்டெரிந்தன ஈகச்சுடர்கள்
கண்ணீரால் நனைந்தன கல்லறைகள்
“உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்……”
தாயக விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த வீரமறவர்களுக்கு – உயிர்க் கொடையாளர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்றுத் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வாக நடைபெற்றன. தாயகத்தில் உள்ள துயிலும் இல்லங்களில் உள்ள மாவீரர் கல்லறைகள் நேற்றுக் கண்ணீரால் நனைந்தன.
நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டு தெற்கில் ஆட்சியாளர்கள் பிளவுண்டு – மீண்டும் மஹிந்தவின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் நேற்று வடக்கு – கிழக்கில் மாவீரர் நாள் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
கடந்த ஆண்டைப் போலல்லாமல் வடக்கு – கிழக்கில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குப் பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியபோதும் மக்கள் இவற்றைக் கண்டு அஞ்சாமல் வீரமறவர்களுக்குத் துணிவுடன் துயிலும் இல்லங்களுக்குச் சென்று சுடரேற்றினர்.
தாயகத்தில் உள்ள அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் நேற்று மாலை சமநேரத்தில் சுடர்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் நேற்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகள் தாயக தேசத்தில் நிலைகொண்டிருந்தபோது கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று, இம்முறையும் மாவீரர் நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கில் உள்ல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சமநேரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மாவீரர் எழுச்சிக் கீதங்கள் காலையிலிருந்து ஒலிக்கவிடப்பட்டிருந்தன.
நேற்று மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு, 6.05 மணிக்கு ஈகச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்கள் நினைவான ஈகச் சுடர்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. அதனைத் தொடர்ந்து, மாவீரர் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது. பாடல் இசைக்கப்பட்டபோது, மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உயிர்நீத்த தமது சொந்தங்களை நினைத்துக் கதறி அழுதனர். கல்லறைகள் இருந்த இடங்களைக் கட்டியணைத்து ஒப்பாரி வைத்தனர்.
அந்தக் காட்சி துயிலும் இல்லங்களில் கூடியிருந்தவர்களை நிலைகுலைய வைத்தது.
கனகபுரம்
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுப் பெரெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கண்ணீர் மல்கி மாவீரர்களை நினைந்துருகினர். பிற்பகல் 3 மணி முதல் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு மக்கள் சாரிசாரியாக வரத் தொடங்கினர். மாலை 6.02 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரை லெப்.கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகிய மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை ஏற்றினார். அதைத் தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நினைவுச் சுடர்களை உறவுகள் ஏற்றினர். அதைத் தொடர்ந்து துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. கண்ணீர் சொரிய உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர். மாவீரர்களை நினைத்துருகி கதறி அழுது அஞ்சலித்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
உடுத்துறை
யாழ். வடமராட்சி, கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நேற்றுக் காலை முதல் மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தன. துயிலும் இல்லம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. 3 மாவீரர்களின் தாயான யோகராணி ஈகச் சுடரை ஏற்றினார். அதன்பின்னர் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மாவீரர்களை நெஞ்சிருத்தி கதறி அழுது மக்கள் அஞ்சலித்தனர். பெரும் எண்ணிக்கையான மக்கள் நினைவேந்தலில் பங்குகொண்டனர்.
சாட்டி
யாழ். தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது. மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், உரித்துடையோர், மக்கள் என ஏராளமானோர் அதில் பற்கேற்றனர். அதைத் தொடர்ந்து சாட்டி, சிந்தாத்திரை மாதா ஆலய மண்டபத்தில் பெற்றோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. பிற்பகலில் மாவீரர் நினைவேந்தலுக்காகப் பெருமளவானோர் திரண்டனர். பிற்பகல் 5 மணிக்கு முன்னரே துயிலும் இல்லம் மக்களால் நிரம்பியது. தமது உறவுகளை நினைத்துருகி அவர்கள் கதறி அழுத காட்சிகள் கண்களைக் குளமாக்கின. மாலை 6.02 மணிக்கு நினைவொலி ஒழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. 3 மாவீரர்களின் தந்தையான சி.சந்திரசேகரன் ஈகச் சுடரை ஏற்றினார். தொடர்ந்து நினைவுச் சுடர்கள் உறவுகளால் ஏற்றப்பட்டன. நினைவேந்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மதகுருக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம், பாசையூரிலும் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.
கோப்பாய்
யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. 3 மாவீரர்களின் தாயான இராச சகுந்தலை ஈகச் சுடரை ஏற்றினார். அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர் ஏற்றினர். நினைவேந்தலில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டனர். கண்ணீர் விட்டுக் கதறி அழுது மாவீரர்களை நினைவேந்தினர்.
தீருவில்
யாழ். வல்வை, தீருவில் குமரப்பா, புலேந்திரன் நினைவுச் சதுக்கத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. வடமராட்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டபோது அங்கு வந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் ஒலிபெருக்கி உபயோகிக்கத் தடை விதித்ததுடன், மாவீரர் துயிலும் இல்லப் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது என்றும், சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கக் கூடாது என்றும் தடை விதித்தனர். தீருவில் சதுக்கத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு இடத்தில் மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் லெப்டினட் வேலனின் தந்தை ந.செல்லச்சந்திரன் ஈகச் சுடரை ஏற்றினார். அதைத் தொடந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அப்போது கைபேசிகளில் துயிலம் இல்லப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
முழங்காவில்
கிளிநொச்சி, முழங்காவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. நேற்றுக் காலை முதல் துயிலும் இல்லத்தில் மாவீரர்கள் பாடல் ஒலிக்கவிடப்பட்டிருந்தது. துயிலும் இல்லம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. 3 மாவீரர்களின் தாயான கு.பற்குணாம்பிகை ஈகச் சுடரை ஏற்றினர். அதன்பின்னர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மாவீரர்களை உறவுகள் கதறி அழுது அஞ்சலித்தனர். துயிலும் இல்லம் கண்ணீரால் நனைந்தது.
தேராவில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு அவர்களின் ஆயிரக்கணக்கான உறவுகள் அங்கு திரண்டு மலர்களைத் தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும், கண்ணீர் சொரிந்தும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. பின்னர் நினைவுச் சுடர்களை மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றிவைத்தனர்.
இரணைப்பாலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் நினைவேந்தலில் பங்குகொண்டு மாவீரர்களை நினைந்துருகினர். மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. இரு மாவீரர்களின் தாயான ம.மேரிமெற்ரலின் ஈகச் சுடரை ஏற்றினார். அதன்பின்னர் நினைவுச் சுடர்கள் ஏற்றி மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர். மாவீரர்களை நினைத்து உறவுகள் கதறி அழுதனர். மலர்கள் தூவி அஞ்சலித்தனர். அந்தக் காட்சிகள் அனைவரையும் கரைய வைத்தன.
அளம்பில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மாவீரர்களின் உறவினர்கள் மலர் தூவி, கண்ணீர் சொரிந்து மாவீரர்களை நினைவேந்தினர். பெரும் திரளான மக்கள் நினைவேந்தலில் பங்குகொண்டனர்.
வன்னிவிளாங்குளம்
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. மூத்த போராளியும், மாவீரருமான மாறனின் தாய் சி.இராசம்மா ஈகைச் சுடரை ஏற்றினார். அதன்பின்னர் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மாவீரர்களை நினைவேந்தி கதறி அழுது அஞ்சலித்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.
இரட்டைவாய்க்கால்
முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் எழுச்சியுடன் நடத்தப்பட்டது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் லெப்.கேணல். வீஸ்மனின் துணைவி ஈகச் சுடர் ஏற்றினார். அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. உறவுகள் கண்ணீர் விட்டழுது மாவீரர்களை நினைவேந்தினர்.
முள்ளியவளை
முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தி நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. மேஜர் பசீலனின் தாய் ந.தங்கம்மா ஈகச் சுடரை ஏற்றினார். அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. துயிலுமில்லப் பாடல் ஒலிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு மாவீரர்களை நினைவேந்தினர்.
வவுனியா
வவுனியா நகர சபை மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. வவுனியா பிரஜைகள் குழு நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தது. மறவன்குளம் ஆலய முன்றலிலும் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.
நெடுங்கேணி
நெடுங்கேணி, களிக்காடு துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து உறவினர்களால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு மாவீரர்களை நெஞ்சிருத்தி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
ஆட்காட்டிவெளி
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. 3 மாவீரர்களின் தந்தையான க.வைரமுத்து ஈகச் சுடரை ஏற்றினார். அதன்பின்னர் உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மலர் தூவி, கண்ணீர் சொரிந்து கதறி அழுது மாவீரர்களை உறவுகள் நினைவேந்தினர்.
பண்டிவிரிச்சான்
மன்னார், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்மாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் பாலுவின் துணைவி ஜெயந்தி ஈகச் சுடரை ஏற்றினார். அதைத் தொடர்ந்து உறவுகளால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மாவீரர்களின் உறவுகள் கதறியழுது புலம்பி அஞ்சலித்தனர். அந்தக் காட்சிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தன.
ஆலங்குளம்
மன்னார், ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இரு மாவீரர்களின் சகோதரி ஒருவர் ஈகச் சுடரை ஏற்றினார். அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் உறவினர்களால் ஏற்றப்பட்டன.
தாண்டியடி
மட்டக்களப்பு, வவுணதீவு, தாண்டியடி துயிலும் இல்லம் அருகே உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாலை 6.05 மணிக்கு மாவீரர் ஒருவரின் தாயார் ஈகச் சுடரை ஏற்றிவைக்க ஏனைய சுடர்களை அங்கு வருகைதந்த அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஏற்றிவைத்தனர்.
கண்டலடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்டலடி துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு அன்பரசி படையணியின் விசேட தளபதியாக இருந்த லெப்.கேணல் மதனாவின் தாயார் நாகேந்திரம் இராசமணி ஈகச் சுடரை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நினைவுச் சுடர்களை ஏற்றினர்.
மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் எழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு மாவீரர்களை நினைவேந்தினர்.
கஞ்சிகுடிச்சாறு
அம்பாறை மாவட்டத்தின் ஒரேயொரு துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயாரான கனகசுந்தரம் தில்லையம்மா ஏற்றிவைத்தார். ஏனைய சுடர்களை அங்கு வருகை தந்திருந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் ஏற்றிவைக்க மாவீரர் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது. இதன்போது அங்கு நின்றோர் கண்ணீர்விட்டு அழுதனர்.
திருகோணமலை
தாயக மண்மீட்புப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் மாவீரர் நினைவேந்தல் நேற்று நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
இதேவேளை, கடந்த காலங்களைப் போன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. இரு பல்கலைக்கழகங்களும் சிவப்பு – மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சியுடன் கம்பீரமாகக் காட்சியளித்தன. பல்கலைக்கழக சமூகத்தினர் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இதுதவிர மாலை 6.05 மணிக்கு ஆலயங்களிலும், பொதுவான இடங்களிலும் மற்றும் வீடுகளிலும் மாவீரர்கள் நினைவாக ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
வடக்கு, கிழக்கிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை அலுவலகங்களிலும் மாவீரர்களுக்கு நேற்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்களில் நேற்று மாலை நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்று பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
(படங்கள்:- ஊடகத்துறை நண்பர்கள்)