உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரிப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழுவினரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதியுடனான சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளு மன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்தி ரன் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. விசேட பிரதிநிதியுடனான சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ஜனநாயக அரசாங்கமொன்றின் பொறுப்புக்கூறல் குறித்து நாம் வலியுறுத்துவோம்.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்தப்படுகின்றது. அவ்வாறான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு முன்னதாக நல்லிணக்கம் கண்டறியப்படவேண்டும். அதன் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதிகிடைக்கவேண்டும். அவர்களுக்குரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். இது தொடர்பாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தமளித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழர் தாயகங்களான வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் மீள் குடியேற்றம், காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலைமை, யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவம் அதிகளவில் நிலைத்திருத்தல், தமிழ் இளைஞர், யுவதிகள் விசாரணைகளின்றி நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், அவர்களின் விடுதலை, அசாதாரண கால ப்பகுதியிலும் காணாமல்போனோர் யுத்தத் தின் இறுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணமல்போனவர்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வாதார உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உட்பட பல விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயவுள்ளோம் என்றார்.
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொட ர்பில் இலங்கையின் முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு ஐ.நா.வின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் வருகைதந்துள்ளார். ஆறு நாட்கள் இங்கு தங்கவுள்ள இவர், ஆளும், எதிர்த்தரப்பு அரசியல் தலை வர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்புக் களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவு ள்ளதுடன் வட மாகாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.