ஏப்ரல் 1-ந் திகதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்று வதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான். ஏப்ரல் 1-ந் திகதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார்கள். காரணம், அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன் பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச் செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு பல்வேறு சுவாரசியமான வரலாற்று தகவல்கள் உள்ளன. பண்டைய காலத்தில் ரோமானி யர்கள் ஏப்ரல் 1-ந் திகதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது. இந்த நிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், ‘ஜார்ஜியன்’ என்ற புதிய நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார்.
அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் திகதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் திகதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்” என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார்.
பல்வேறு நாடுகள் புதிய நாட்காட்டி முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் திகதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.
இவ்வாறு நாட்காட்டி மாற்றப்பட்டு புதிய நாட்காட்டி முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் திகதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் தினம் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் திகதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு. அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் விழிப்போடு இருங்கள்.!