வடக்கில் சொந்த நிலங்களில் வாழவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஒரே எதிர்பார்ப்பு. அந்த விடயத்தில் அவர்களுக்கு துரோகமிழைத்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் இழப்புக்களுக்கு எம்மால் எதையும் ஈடுசெய்ய முடியாது. தேசிய கீதத்திலேயே பிரிவினையினை தூண்டுவோர் எவ்வாறு தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்துவர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர்கள் அவர்களின் உரிமைகளை அனுபவிக்க இடம் கொடுக்க வேண்டும். நாட்டில் புதிய பாதையினை உருவாக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அதனை செய்ய வேண்டும். அதற்கு தேசிய அரசில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமாயின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் மூலம் தேசிய ஒற்றுமையினை பலப்படுத்த வேண்டும். 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் எவ்வளவு? வடக்கு யுத்தத்தில் எத்தனை மக்கள் உயிரிழந்தனர் என்பது இன்றுவரை தெரியாதுள்ளது. வடக்கில் விதவைப் பெண்கள் மாத்திரம் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். வடக்கில் நிலங்களை பெற்றுக் கொள்வது அம் மக்களின் உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மிகவும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் பூர்த்தியாகப் போகின்ற சூழலிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத நிலையிலும் அந்த மக்கள் பாரிய ஏக்கங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் உரிய முறையில் செய்துகொடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
பல வருடங்களுக்கு முன்னர் வடக்கில் பறிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளக்கொடுக்கப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகள் விடுவிக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் முழுமையாக இடம்பெறவில்லை. இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். முக்கியமாக யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்த கடந்த அரசாங்கம் தவறிவிட்டது. மாறாக, இனங்களுக்கு இடையில் தொடர்ந்து விரிசல்களை ஏற்படுத்தும் நகர்வுகளே இடம்பெற்றுவந்தன.
இந்நிலையிலேயே தமிழ் மக்களின் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்றும் அந்த மக்களுக்கு தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமையை யாராலும் தடுக்க முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக வடக்குக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை மிகவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக, வடக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமான பிரதமர் அலுவலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மேலும், வடக்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, வடக்கில் சிவில் நிர்வாகம் வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆறாத வடுக்களை சுமந்து நிற்கின்ற மக்களின் வேதனைகளை புரிந்துகொண்டு அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தடவைகளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு தடவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகளும் வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் தமது பிரச்சினைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படக் கூடாது. குறிப்பாக, விதவைப் பெண்களை தலைவிகளாகக் கொண்டுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்துக்கான வழிகள் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
யுத்த காலத்திலும் வடுக்களை சுமந்த வண்ணம் வாழ்ந்த மக்கள் யுத்தமும் முடிவடைந்து ஆறு வருடங்கள் நிறைவடையப் போகின்ற நிலையில் இன்னும் ஆறாத வடுக்களுடன் வாழ்வதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தப்போக்கில் இருந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி, மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது. இந்நிலையில், அன்று எதிர்க்கட்சியாக குரல் கொடுத்த கட்சி தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் ஆக்கபூர்வமான தீர்வைக்காண நடவடிக்கை எடுக்கலாம்.
இதேவேளை, கடந்த காலங்களில் காணிகளை இழந்துள்ள மக்கள் மற்றும் யுத்தகாலத்தில் தமது உறவுகளை தொலைத்துவிட்டு தவிக்கின்ற மக்கள் என யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வேதனை சொற்களினால் விபரிக்க முடியாதவையாகும். மீள்குடியேற்றக் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் விரைவான கவனத்தைச் செலுத்தி உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூறியுள்ளதைப் போன்று மக்களின் இழப்புக்களுக்கு எதையும் ஈடுசெய்ய முடியாது.
பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் பிற்போடவைக் கூடியவை அல்ல. அந்த மக்களின் மனங்களிலுள்ள நீங்காத வடுக்களுக்கு விரைவில் ஆறுதல் அளிக்கவேண்டும். கடந்த 30 வருடகாலமாக யுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்த மக்களுக்கு இனியாவது எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை கட்டியெழுப்பத் தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும். நல்லிணக்கம் என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அம்சமாகும்.
அந்த மக்கள் கடந்த கால காயங்களை மறந்து நம்பிக்கையுடன் வாழ்க்கையை கட்டியெழுப்பத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். அவர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படும் விடயத்திலும் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் புதிய அரசாங்கம் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் செயற்பாடுகளில் தாமதங்கள் இருக்கக்கூடாது.
எனவே, அதனை கவனத்திற்கொண்டு அந்த பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். இந்த விடயத்தில் வடக்கு அரசியல்வாதிகளும் மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் பொறுப்புடன் செயலாற்றவேண்டும்.