தமிழகம் தஞ்சாவூரில் லெப்டினன்ட் போசன் மாவீரர் துயிலும் கல்லறை !

0
556

தமிழகம் தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலியின் நினைவு கல்வெட்டு உள்ளது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தை கண்டறிந்து இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்கிறார்.
லெப்டினன்ட் போசன் என்பவர் யார்? அவர் நினைவிடத்தை எப்படி கண்டறிந்தனர் என்று கேட்கும் போது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது.

தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் தமிழ்த்தேசிய அரசியல் வழியாக உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் தமிழர் தமிழீழம் என்ற இலட்சியப் பதாகையை ஏந்தி மக்கள் களத்தில் பணியாற்றி வருகிற ஒரு தலைவர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் நீண்டகாலமாக இருக்கும் இடுகாட்டின் பெயர் “நாத்திகர் இடுகாடு” இந்த இடுகாட்டில் பட்டுக்கோட்டை அழகரி உள்ளிட்ட பலரின் கல்லறை உள்ளது. பல கல்லறைகளின் கல்வெட்டில் ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா அவர்கள் பல கல்வெட்டுகளை அவர் காலத்தில் திறந்துள்ளார் என்பது அக்கல்லறையை பார்க்கும் போது நமக்குத் தெரிகிறது.
அந்த கல்லறையில்தான் மாவீரர் போசன் கல்லறையும் உள்ளது. ஆனால் பாரமரிப்பின்றி அடர்ந்த புதராக அக்கல்லறை காட்சியளிக்கிறது. வடக்குவாசலைச் சேர்ந்த ஒருவர் காலை நேரம் வழக்கம் போல் அந்த கல்லறையின் அருகில் மலம் கழிக்கச் சென்றுள்ளார். அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மலம் கழிக்கையில் காற்றின் அசையில் முட்புதர் செடிகளுக்கிடையே “ விடுதலைப் புலி என்ற வாசகம் பொறித்த கல்வெட்டை கவனித்துள்ளார். உடனே முட்செடிகளை அகற்றி படித்துள்ளார். அதில்,
”தமிழீழ விடுதலைப் புலி போசன் நினைவு கல்வெட்டு. மறைவு-27-06-1989
திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல்
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம்.தஞ்சாவூர்.”
என்றிருந்துள்ளது.

அதை அவர் கண்டதும். அந்த ஊரில் வசிக்கும் தமிழர் நலப்பேரியக்கத் தோழர் ஒருவரிடம் மேற்கண்ட விடயங்களை விவரித்துள்ளார். இச்செய்தி அவருக்கு புதிதாக இருந்துள்ளது. உடனே தமிழர் நலப் பேரியக்கத்தோழர் இயக்குநர் மு. களஞ்சியத்திற்கு இதுபோன்ற ஒரு கல்லறை இருக்கும் செய்தியை சொன்னதும், மு. களஞ்சியம் அவர்கள் விமானம் பிடித்து உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளார்.
தமது இயக்கத்தோழர் தெரிவித்த அந்த நாத்திகச் இடுகாட்டிற்குச் சென்று அங்குள்ள மாவீரர் போசன் கல்லறையைக் கண்டறிந்து வியப்படைந்துள்ளார். அந்த நிமிடமே களத்தில் இறங்கி மலக் கழிப்பிடமாக; பராமரிப்பின்றி கிடந்த போசன் கல்லறையை தானே இறங்கி சுத்தப்படுத்தி இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வை போசன் துயிலுமில்லத்தில் தொடங்குவதாக அறிவித்தார்.

யார் இந்த லெப்டினன்ட் போசன்?
இயக்கப் பெயர் போசன், இயற்பெயர்: பஞ்சலிங்கம் சிவகுமாரன், சொந்த ஊர்: கோவிலடி, முகத்துவாரம், மட்டக்களப்பு. வீரப்பிறப்பு 26.11.1963, வீரச்சாவு: 27.06.1989
தமிழீழத்திலே பிறந்து,தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இலட்சிய வழியிலே நின்று,சிங்கள இனவெறி இராணுவத்தை ஓட ஓட விரட்டியடித்தவர்களில் முதன்மையார், இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறும் காலகட்டத்தின் தமது அறச்சீற்றத்தை வெளிக் கொணர்ந்து இந்திய சிங்கள இராணுவத்தினரை நேர்நின்று மோதியவர். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தஞ்சமைடைந்து போரில் காயமுற்றிருந்த அவர் தொடர் மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் போசனை இருக்குமிடமறிந்து தமிழக காவல் துறையின் துணையோடு அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே அணிந்திருந்த சாவுச் குப்பியை (சயனைட் குப்பி) கடித்து சாவைத் தழுவியுள்ளார்.
நாம் போற்றத்தக்க தமிழீழ மாவீரனுக்குத்தான் அக்காலகட்டத்தில் திராவிட கழகத்தினரால் அக்கல்லறை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. கிட்டத்த 29 ஆண்டுகளாக தஞ்சை மண்ணிலே மாவீரர் போசன் விதையாக உறங்குகிறார். இத்தனை ஆண்டு காலம் இப்படி ஒரு கல்லறை இருக்குமென்று யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு கல்லறை இருந்தும் அதை யாரும் தொடர்ந்து போற்றி பாதுகாக்க வில்லை எனும் போது வருத்தமளிக்கிறது.
1989 இல் விதையாக விழுந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் 2018 மாவீர நாளில் மீண்டும் நம் இலட்சியக் கனவை தட்டியெழுப்ப நான் தஞ்சையில்தான் இருக்கிறேன் என்று நம்மை அழைத்துள்ளார். இயக்குநர் மு. களஞ்சியம் வழியாக!
வருகிற 27.11.2018 அன்று சிறப்பாக நடக்கவுள்ள இம்மாவீர நிகழ்வுக்கு வழக்கும் போல் தமிழக காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. காரணம் ”மாவீரர் கல்லறையா?தஞ்சையிலா?…” என்று காவல்துறை,உளவுத்துறை விழித்துக் கொண்டது.
அவர்களின் முதல் நோக்கம், இந்த நிகழ்வை நடக்க விடக் கூடாது தடுத்து விட வேண்டும். இரண்டாவது நோக்கம், இந்த கல்லறையை அழித்து மறைத்து விட வேண்டும்.
”அனுமதித்தால் அமைதியாக நடக்கும்.அனுமதி மறுத்தால் கலவரத்தோடு நடக்கும்” என்று இயக்குநர் மு. களஞ்சியம் காவல்துறையிடம் பேசியுள்ளார். 27.11.2018 தஞ்சையில் இல் சீமான் (நாம் தமிழர் கட்சி) பழ.நெடுமாறன்( தமிழர் தேசிய இயக்கம்) உள்ளிட்டோர் நிகழ்ச்சி நடக்க இருப்பதால் 26.11.2018 அன்று பல்வேறு நிபந்தனைகளோட்டு அனுமதி தந்துள்ளது தமிழக காவல்துறை.
கர்த்தர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போல் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மாவீரர் போசன் மீண்டும் நம் கண்முன் தெரிகிறார்! வரலாறுகள் புதைக்கப்பட்டாலும்! மறைக்கமுடியாது என்பது போசன் கல்லறை நமக்கு உணர்த்திய படிப்பினையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here