தமிழீழ இலட்சியத்துக்காகத் தமது இறுதி மூச்சுவரை போராடி, களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மண்ணிலும் புலம்பெயர் தேசமெங்கினும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தாயக தேசத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி – குழப்பங்களிற்கு மத்தியிலும், கொரோனா கொல்லுயிரியின் கோரத்திற்கு மத்தியிலும் மான மறவர்களை நினைவிற்கொள்ளும் மாவீரர் நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு, தமிழர் தேசம் தயாராகிவருகின்ற நிலையில் தமிழர் தாயகத்தில் இனவாத சிறிலங்கா அரசு நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் போட்டுத் தடுத்து நிற்கிறது.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், மாவீரர் துயிலும் இல்லங்கள் சிறிலங்கா இனவாத இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன. மாவீரர் வாரத்தை நினைவுகூர முடியாத அளவுக்கு நெருக்கடிகளும் – கெடுபிடிகளும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு, பகிரங்கமாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டன. தமிழீழ தேசத்தில் முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்களில், மாவீரர் பெற்றோர்களின் கண்ணீர்க் கதறலுடன் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டும் மாவீரர் நாள் நினைவேந்தல் தாயக தேசத்தில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிப்பதற்கு தயாராகிவிட்டன. கடந்த ஆண்டும் துப்புரவுப் பணிகள் மக்களால் மும்முராக முன்னெடுக்கப்பட்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்த கங்கணம் கட்டி நின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தை 1989ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும்.
நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படும். மறுநாள் நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரை முடிவடையும் தருணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டு, மாவீரர்களுக்கான நினைவுப்பாடலுடன், ஈகச்சுடரேற்றல் நடைபெறும்.
இந்த மாவீரர் வாரத்தில் நாம் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து மான மறவர்களை நினைவேந்தி நிற்போம் என ஒவ்வொருவரும் மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!