ஆப்கன் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 43 பேர் பலி!

0
702

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மதத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 43 பேர் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 83 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

சமீப காலத்தில் காபூலில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று இது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாலிபன்கள் நடத்தும் தொடர் தாக்குதல்களும் பாதுகாப்பு படைக்கு தொடர் அழுத்தத்தை தந்துவருகின்றன.

நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்களும், அவர்களைப் பின்பற்றுவோரும் மிலாது நபி பண்டிகையை ஒட்டி ஒரு அரங்கத்தில் கூடி இஸ்லாமிய புனித நூலான குரானில் இருந்து சில பகுதிகளை ஓதிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக காபூல் போலீசுக்கான செய்தித் தொடர்பாளர் பசிர் முகம்மது தெரிவித்தார்.

முகம்மது நபியின் பிறந்த நாளை ஒட்டி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்தக் கூட்டத்தின் மத்தியில் இருந்து தற்கொலை குண்டுதாரி தம்மை வெடிக்க வைத்துக்கொண்டதாக அந்த அரங்கத்தின் மேலாளர் கூறினார்.

காயமடைந்தவர்களில் 24 பேர் மோசமான நிலையில் இருப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்களை மேற்கோள் காட்டி ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here