யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவருக்கும் கடும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் மற்றும் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகியோருக்கே யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடும் நிபந்தனைகளுடனான பிணையினை வழங்கியுள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் கட்டளை வழங்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் தொடர்ச்சியாக 16 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார்.
‘சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும்.
சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகிறது’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.