அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.
கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அப்பகுதிகளில் கடும் புகை மூட்டமாக உள்ளது. இதனால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
கடந்த 8-ம் தேதி எரியத்தொடங்கிய இந்த காட்டுத்தீயானது, சுமார் 27 ஆயிரம் மக்கள் வாழும் பாரடைஸ் நகரை முற்றிலுமாக பொசுக்கி அழித்து விட்டது. அருகாமையில் உள்ள பகுதிகளையும் சேர்த்து 10 ஆயிரம் வீடுகள் நாசமடைந்தன. 52 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.
மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுக்கு இடையில் சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆக்ரோஷமாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் இதில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 76 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தீ சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த 1200-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் அடைக்கலம் அடைந்துள்ளனரா? அல்லது, காட்டுத்தீயில் சிக்கிக் கருகி விட்டார்களா? என்னும் பீதி அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் நகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கலிபோர்னியா மாநிலத்துக்கு வந்தார். சாக்ரமான்டோ நகரின் வடக்கேயுள்ள பியேல் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்ற டிரம்ப், இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
அதிகம் பாதிக்கப்பட்ட பாரடைஸ் நகரில் எரிந்த வீடுகளை அவர் சென்று பார்வையிட்டார். உடைமைகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய டிரம்ப், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், போலீசார், அரசியல் தலைவர்கள், காணாமல் போனவர்களை தேடும் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆகியோரின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஆயிரத்துக்கிம் அதிகமான மக்கள் காணாமல் போனது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். அவர்களின் நிலை என்ன என்பது பற்றி, யாருக்கும் சரியாக தெரியவில்லை. மோசமான நிலையில் காயப்பட்டுள்ள மக்களை கவனித்து கொள்வது நமது தற்போதைய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.