பிரான்ஸின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடக்கம்!

0
177

மஞ்சள் அங்கி’ (Gilets jaunes) இயக்கத்தினர் இன்று காலை முதல் முன்னெடுக்கும் வீதி மறியல் போராட்டம் பிரான்ஸின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துகளை முடக்கியிருக்கிறது. சுமார் 1500 இடங்களில் மறியல் நடப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சட்டம், ஒழுங்கைப் பேணி வீதிப் போக்குவரத்துகளை சீராக்கும் பணிகளில் பல்லாயிரக்கணக்கான பொலிஸாரை களமிறக்கியிருக்கின்றது அரசு.

Pont-de-Beauvoisin என்னும் இடத்தில் மறியலின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்தார் என வரும் செய்திகள், நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகின்றது.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் அவற்றின் மீதான புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் உத்தியோகபூர்வ அமைப்புகளோ அன்றி வேறு அரசியல் சக்திகளோ தொழிற்சங்கங்களோ கிடையாது. முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்களின் ஊடாக உருவெடுத்த ஒரு மக்கள் இயக்கமே நாடுமுழுவதும் வீதிப்போக்குவரத்துகளை முடக்கி அரசுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள்களின் மொத்த விலை அதிகரிப்பே நாட்டில் அவற்றின் விலைகளை உயர்த்தக் காரணம் என்று கூறும் மக்ரோன் அரசு, அதற்குப் புறம்பாக எரிபொருள்களுக்குப் புதிய பல வரிகளையும் அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தவிருக்கிறது.சுற்றுச்சூழல்
பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் டீஸல் வாகனங்களை முற்றாக இல்லாதொழித்து, எரிபொருள் இன்றி பிற சக்திகளில் இயங்கும் மாற்று வாகனங்களின் வரவை ஊக்குவிப்பதற்காகவே எரிபொருள்கள் மீது இந்தப்புதிய வரிகள் என்று அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் நாளாந்தப் போக்குவரத்துக்கு தமது சொந்த வாகனங்களை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்சம் பிரெஞ்சு கிராம மக்கள் மத்தியில் அரசின் வரிவிதிப்புத் திட்டம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதன் விளைவே இந்த மஞ்சள் அங்கி இயக்கத்தின் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடின்றி சகலரையும் இன்று வீதிகளுக்கு இறங்குமாறு கோரியிருக்கும் இந்த ‘ மஞ்சள் அங்கி’ இயக்கத்துக்கு சுமார் 70 வீதமான பிரெஞ்சு மக்களின் ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

‘செல்வந்தர்களின் அதிபர்’ என சிலரால் வர்ணிக்கப்படும் மக்ரோன், கிராம மக்களின் குரலை செவிமடுக்கத் தவறுகின்றார் எனப் பரவலாகக் கோஷங்கள் எழுந்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here