ரொஹிங்கிய அகதிகளை பங்களாதேஷ் நிர்வாகம் மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்புமா என்ற சந்தேக வலுத்திருக்கும் நிலையில் அகதி முகாம்களில் குழம்பம் மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அகதிகளின் முதல் குழுவை மியன்மாருக்கு அனுப்பும் திட்டம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதாக பங்களாதேஷ் நிர்வாகம் கூறியிருந்தது.
எனினும் அது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து தெளிவு இன்றி உள்ளது.
மியன்மாரில் நிலைமை இன்னும் பாதுகாப்பு இன்றி இருப்பதால் எவரும் வலுக்கட்டாயமாக அங்கு அனுப்பப்படக் கூடாது என்று ஐ.நா மற்றும் உரிமைக் குழுக்கள் வலியுறுத்துகின்றன.
கடந்த ஆண்டில் 700,000க்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு தப்பி வந்தனர். மேற்கு ரக்கின் மாநிலத்தில் மியன்மார் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கை மற்றும் வன்முறைகள் காரணமாகவே இவர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.
இதற்கு முந்தை வன்முறைகள் காரணமாக ஏற்கவே மியன்மாரில் இருந்து சுமார் 300,000 ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த அகதிகள் மியன்மாருக்கு திரும்ப பங்களாதேஷ் மற்றும் மியன்மாருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் தமது உறவினர்களை இழந்து வீடுகள் தீமூட்டப்பட்டு வன்முறைகளை சந்தித்த பெரும்பாலான ரொஹிங்கிய அகதிகள் மீண்டும் மியன்மார் செல்ல அச்சமடைந்துள்ளனர்.
இந்த அகதிகளின் முதல் குழு நேற்று வியாழக்கிழமை மியன்மார் செல்லவிருந்தபோதும், தற்போதைய சூழவில் 50க்கும் குறைவான குடும்பங்களே அங்கு செல்ல முன்வந்திருப்பதாக பங்களாதேஷின் அகதி ஆணையாளர் முஹமது அபுல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது திரும்புவது பாதுகாப்பானதாக எவரும் உணரவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக எம்மால் திருப்பி அனுப்ப முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.