காங்கேசன்துறையிலிருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள கஜா சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று காலை 8.30 வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கஜா சூறாவளி நாளை (15) மாலை வேளையில் வடக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் இருந்து தமிழகத்தை நோக்கி நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இன்றும் நாளையும் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாக காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.