முடிந்தால் மதிமுகவை தடை செய்து பார்க்கட்டும்: சுப்பிரமணியன் சுவாமிக்கு வைகோ சவால் !

0
227

02-vaiko-swamy34-600மதிமுகவை தடை செய்வோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஏஜெண்ட் சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார்… முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சவால் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: பாரதிய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேச வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள்.

அவர்களிடம் தகுதியில்லாத ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன். ராஜாவின் மிரட்டலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதிய ஜனஹ்டா கட்சியில் முக்கிய தலைவராக இருப்பதாக கூறிக்கொள்ளும் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் ம.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க. மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் சுப்ரமணிய சுவாமி மிரட்டுகிறார்.

எனக்கும், பாஜகவுக்குமான பிரச்சினைக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு? என்று தெரியவில்லை. ம.தி.மு.கவை தடை செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணிய சுவாமியை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்? நான் எம்.ஜி.ஆர்., ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் என்னை மிரட்டியதில்லை.

இப்போது ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். முடிந்தால் அவர்கள் ம.தி.மு.க.வை தடை செய்து பார்க்கட்டும். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு கலவரத்தில் 62 பேர் பலியானார்கள். அப்போது பாஜகவினர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்போது பேசியது நான்தான். விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்த காரணத்தால்தான் கடந்த 1998-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் வாஜ்பாயும், அத்வானியும் என்னை சேர்த்தார்கள். வாஜ்பாய் ஆட்சி கவிழ சுப்பிரமணிய சுவாமி தான் காரணம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ம.தி.மு.க.வினர் எப்போதும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சேவின் ஏஜெண்ட். அதனால்தான் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார். இப்போது ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுத்துவிட்டு மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் பாரத ரத்னா தருவீர்களோ? இவ்வாறு வைகோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here