மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரானில் ஞாயிற்றுக் கிழமை இரவு (29) உந்துருளி மின் கம்பத்துடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான செ. ஆதித்தன் வயது (39) என்ற மாமா முறையானவரும் அவரது மருமகனான வி. ஜேப்பிரகாஸ் வயது (27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஞாயிறு இரவு இருவரும் வந்தாறு மூலையில் உள்ள நண்பர் ஒருவரின் மருங்கை வீட்டு விழாவிற்கு சென்று உந்துருளியில் வீடு திரும்பும் வழியில் கிரான் பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கொழும்பு வீதியில் அமைந்துள்ள மின் கம்பத்தில் உந்துருளி வேக கட்டுப்பாட்டினை மீறி மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வாகனத்தில் சென்றவர்கள் சம்பவ இடத்தினிலேயே உயிரிழந் துள்ளதாகவும் தெரிவித்தனர்.