ஈரான் மீது மீண்டும் தடை விதித்தது அமெரிக்கா!

0
558

ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாட்டின் மீதான சர்வதேசத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.

இந்தநிலையில், குறித்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக கடந்த மே மாதம் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், ஈரான் மீதான தடைகளை முதற்கட்டமாக விதித்திருந்தது.

இந்தநிலையில், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டாம் கட்டத் தடைகளை தற்போது அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானின் எண்ணெய் மற்றும் கப்பல்துறை, அதன் மத்தியவங்கி உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்தத் தடைகள் அமைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் கொள்வனவில் கட்டுப்பாடு, தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோக வர்த்தகம் மற்றும் வாகனத்துறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் ஈரானுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் கடந்த மே மாதம் முதற்கட்ட பொருளாதாரத் தடைகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய அணுசக்தி செயற்பாடுகளில் கட்டுப்பாட்டுடன் செயற்பட ஈரான் ஒப்புக்கொண்டதையடுத்து, 2015 ஆம் ஆண்டு ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், அணுகுண்டு தயாரிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் நிறுத்தவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது.

அத்துடன், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பயங்கரவாதத்திற்கு அது ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து, குறித்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here