இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான லயன் எயார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான JT 610 என்ற விமானத்தின் கறுப்புப் பெட்டி சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, 189 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஜாவா கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
விபத்து சம்பவித்தமைக்கான காரணம் இன்னும் தென்படாதவிடத்தில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் சில வௌியாகியுள்ளன.
இந்தநிலையில், கடந்த 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் குறித்த விமானத்தின் கறுப்புப் பெட்டி, சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளது.
சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் கறுப்புப்பெட்டியை கண்டுபிடித்ததாக சுழியோடி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் விபத்திற்கு முன்னர், விமானத்தைத் திருப்புவதற்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் குறித்த விமானத்தின் விமானி அனுமதி கேட்டுள்ளதாகவும் ஆனால், அதற்கிடையில் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.