மாலத்தீவில் சாலையில் நடந்து செல்லும் இந்தியர்கள், தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கொடூர ஆயுதங்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம், செறியாவட்டம் பகுதியை சேர்ந்த சாம் ஸ்டான்லி என்பவர் காயமடைந்துள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபரின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஆளும் மாலத்தீவு அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்களின் படங்களையும் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உட்பட மாலத்தீவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயங்களுடன் காணப்படுகின்ற வாலிபர்களின் படங்களும் முகநூலில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.