மன்னார் மாவட்டத்தில் அடுத்த மாதம் 27 ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தல்களின் போது அரசியல்கட்சிகளையோ அல்லது அரசியல் பிரதிநிதிகளையோ உட்புகுத்தாது பொதுவான மாவீரர் தின நினைவேந்தலாக அமைய வேண்டும் என அருட்தந்தை நவரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 27 திகதி தமிழ் மக்களுக்காக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டி விரிச்சான் ஆகிய இரு இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தின நினை வேந்தல்கள் இடம்பெறவுள்ளது.
குறித்த இரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களுக்கான நினை வேந்தல்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் மன்னார் பெரியகமம் பொதுமண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அருட்தந்தை நவரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் குழுவில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் அல்லது கருத்துக்களோ இதில் அமைக்கப்படும் குழுக்களிலே வேண்டாம்.
யாராக இருந்தாலும் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தாது தனி நபராக வரலாம் . மாவீரர்கள் எதை விட்டு சென்றார்களோ அதை உண்மையிலே தொடர நினைப்பவர்களே வரவேண்டும்.
மாவீரர்களின் ஆசை வெறுமனே நாம் தூவும் பூக்களில் சாந்தியடைய போவதில்லை. அவர்களின் கொள்கைகளை நாம் தொடர்வதிலேயே சாந்தியடையும்.
அத்துடன் 2016 ஆம், 2017 ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்திலும் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. இனியும் தொடரத்தான் போகின்றது.
எனவே அதைப் பற்றி கவலைப்படாது எமக்காக இறந்தவர்களை நினைவு கூருவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் அருட்தந்தையர்கள் ,முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , மன்னார் நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கூட்டத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பு மற்றும் கட்டமைப்பு உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.