ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு – கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அலரி மாளிகை முன்றலில் நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருந்திரளான ஆதரவாளர்களின் பங்கேற்புடன் பிற்பகல் 1 மணியளவில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடன், ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, உடனடியாக ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைவதற்கான நேரம் தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
மக்கள் ஆணையைப் பறிப்பதற்கு எவருக்கும் ஆணை வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
தனது தந்தையைப் போல நாட்டின் பொதுமக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து, எதனையும் செய்ய முடியாது திங்கட்கிழமை வரை சிறையில் அடைக்கப்பட்டவர்களைப்போன்று நாம் இருப்போம் என எண்ணினார்கள். அலரி மாளிகையை ஜனநாயகத்தின் இலட்சினையாக நாம் மாற்றியுள்ளோம். உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய தேசிய முன்னணியும் ஏனைய அரசியல் கட்சிகளும் கூறின. அதற்குப் பதிலாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்தனர். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர். நாம் இதற்கு இடமளிக்கப்போவதில்லை. மக்களின் உரிமையான வாக்குரிமையையும் பாராளுமன்றத்தையும் மிதித்து, இதனை புறந்தள்ள நாம் விடமாட்டோம். நாம் வெற்றியடைவோம். நாம் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும். ஏனைய நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டியுள்ளது. இந்த வெற்றியின் ஊடாக பாராளுமன்ற அதிகாரத்தை ஏற்று அரசாங்கம் என்ற ரீதியில், ஜனநாயக ரீதியில் முன்னோக்கிச் செல்வோம்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே தடை
உத்தரவொன்றை இன்று பிறப்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட சிலருக்கு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரச வளாகங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்படவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இன்று மாலை நிறைவு பெற்றது.