வெள்ளிக்கிழமை மாலையில் இலங்கையில் துவங்கிய அரசியல் நெருக்கடி, அதன் பின்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம், இலங்கை – இந்திய உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. இலங்கையில் தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளின் பின்னணி என்ன?
ப. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பல மாதங்களாகவே மோதல் இருந்துவந்துள்ளது. தற்போது அங்கு நடந்திருப்பது அரசியல் சாஸனத்திற்கு முற்றிலும் விரோதமானது. இலங்கை அரசியல் சாஸனத்தில் செய்யப்பட்ட 19வது திருத்தத்திற்குப் பிறகு பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, பிரதமர் தானாக முன்வந்து தனக்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லையென எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது பெரும்பான்மையை இழக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த மூன்றில் எதுவும் நடக்காத நிலையில்தான் புதிதாக ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். சிறிசேனவுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் அதிகரித்துவந்த நிலையில், மஹிந்தவோடு கூட்டு சேர்ந்தால் அவற்றைச் சமாளித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
ஆனால், அரசியல்சாஸனத்தின்படி பார்த்தால் ரணில் இன்னமும் பிரதமராகத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால், மஹிந்தவும் பிரதமராக பதவியேற்றிருக்கிறார். மஹிந்த பதவியேற்ற பிறகு உடனடியாக அரசுக்குச் சொந்தமான ரூபவாஹிணி, லேக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றை மஹிந்தவின் ஆட்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அங்கு இப்போது ஒரு ஸ்திரமற்ற நிலைமையும் வன்முறை ஏற்படக்கூடிய சூழலும் இருக்கிறது.
கே. 19வது திருத்தச்சட்டத்தின்படி பிரதமரை ஜனாதிபதி நீக்க முடியாது என்றாலும் 42 ஏ பிரிவின் கீழ் தான் இதைச் செய்திருப்பதாக சொல்கிறார் மைத்திரிபால சிறிசேன. இது சரியா?
ப. 42 ஏவின் படி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பவரை ஜனாதிபதி நியமிக்கலாம். அவ்வளவுதான். அதை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். 2015லேயே இது முடிந்துவிட்டது. இந்த வருடம் ஏப்ரலில்கூட ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு யாரும் கட்சி மாறவில்லை. அப்படியிருக்கும்போது இம்மாதிரி செய்வது, அரசியல் சாஸனத்திற்கு எதிரானது. பொது நீதிக்கு எதிரானது. அரசியல் மாண்புக்கு எதிரானது. எல்லாம் கேலிக்கூத்தாகிவிட்டது.
கே. மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் இருப்பதாகச் சொன்னீர்கள். என்ன சிக்கல் அவருக்கு?
ப. 2015ல் இந்த அரசு தேர்வுசெய்யப்பட்டு தேசிய ஐக்கிய அரசு உருவாக்கப்பட்டது. அப்போது அவர்கள் பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால், அதில் எதையுமே நிறைவேற்றவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் வரும்போது, தானே ஜனாதிபதியாக வேண்டுமென சிறிசேன நினைக்கிறார்கள். அப்போது தனியாகவோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் நின்றாலோ அது நடக்காது என நினைக்கிறார் சிறிசேன. அதனால், இப்போது அவர் எடுத்துள்ள முடிவு முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு.
இந்த அரசு தேர்வு செய்யப்பட்டவுடன் பல வாக்குறுதிகளைத் தந்தார்கள். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தவித்துப்போயிருக்கிறார்கள். சீனாவின் கடனுதவித் திட்டங்களால் பெரும் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது; ஆகவே பல திட்டங்களை நிறுத்தப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், ஒரு திட்டமும் நிறுத்தப்படவில்லை. எதுவும் நடக்கவில்லை. மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதற்கு மஹிந்தவே பரவாயில்லையென நினைக்கிறார்கள். அவருடைய அந்த பிரபலத்தில் தான் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என நினைக்கிறார் சிறிசேன. அதனால்தான் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
கே. ரணில் விக்ரமசிங்கே முன்பிருக்கும் வாய்ப்புகள் என்ன?
ப. ரணிலுக்கு இருக்கும் முக்கியமான வாய்ப்பு, பாராளுமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பது. இதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்ட அவர் திட்டமிட்டிருந்தார். இதையடுத்துத்தான் பாராளுமன்றக் கூட்டத்தை முடக்கி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அடுத்து எப்போது பாராளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது என்பதை ஜனாதிபதிதான் முடிவுசெய்வார். எப்போது மஹிந்த ராஜபக்சேவால் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய சூழல் வருகிறதோ அப்போதுதான் பாராளுமன்றம் கூட்டப்படும்.
(பிபிசி)