வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் தொலைக்காட்சி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நகரில் விடுதி நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.
அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். அவர் கேபிள் இணைப்பைப் பிடித்தவாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்டபோது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த விடுதியால் கேபிள் தொலைக்காட்சி இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது என்று பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் முன்னிலையான யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், அந்த நிறுவனத்தால் கேபிள் தொலைக்காட்சி இணைப்பு வழங்கப்படுவதில்லை என்று வாதாடி பொலிஸாரின் குற்றச்சாட்டு வழக்கை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.