திருவாரூரில் கட்டப்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகியுள்ளனர். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாககுடி என்ற கிராமத்தில் 100 ஏக்கரில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது.
ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அந்த பல்கலைக்கழகம் கடந்த 2014ம் ஆண்டே குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்தது. கட்டிடப் பணிகள் முழுமையாக முடியாததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெற்றார். இதையடுத்து பல்கலைக்கழகத்தை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை எழுந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக கட்டிடம் தரமானதாக இல்லை என்று புகார் எழுந்தது. இந்த சூழலில் பல்கலைக்கழக கட்டிடத்தின் மேல்கூரை இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர், 18 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.