ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை கால வரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி, அதன் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் சிலரால், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த முடிவை எடுத்துள்ளது.
அதற்கமைய இன்று (24) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர், பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களையும் அங்கிருந்து செல்லுமாறு, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் புகுந்துகொண்டு சிங்கள மாணவர்கள் சிலர் இரண்டு வார காலமாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு போராட்டத்தை எதிர்த்து கடந்த திங்கட்கிழமை (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக நிர்வாகிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி குறித்த மாணவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து குறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெருமளவான மாணவர்களின் கல்வி பாதிப்பதற்கு இடமளிக்காது, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பல்கலைக்கழகத்தை சுமுக நிலைக்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என பெருமளவானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பகடி வதையில் ஈடுபட்டதாக தெரிவித்து பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த நான்கு சிங்கள மாணவர்களை மீண்டும் பல்கலைக் கழகத்தில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தி அதே துறையைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் புகுந்து ஆக்கிரமித்து, இரண்டு வாரமாக அங்கேயே தொடர்சியாகத் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாணவர்கள், வேறு எவரையும் நிர்வாகக் கட்டடத்தினுள் நுழை அனுமதிக்காமையினால், பல்கலைக்கழக நிர்வாக, நிதி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், குறித்த மாணவர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்பாடு பதிவு செய்தது.
இதனையடுத்து, நிர்வாகக் கட்டடத்தில் புகுந்துள்ள மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (22) உத்தரவிட்டிருந்து.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், நிர்வாகக் கட்டத்தில் புகுந்துள்ள மாணவர்கள் அங்கேயே தொடர்ந்தும் தங்கி வந்த நிலையில், பல்கலைக்கழகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.