இணுவில் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க கிராமம் ஆகும். பரராஜசேகரன், செகராஜசேகர மன்னர்கள் ஆட்சி செய்த பிரதேசம் என்றுபோற்றப்படும் இணுவில் கிராமத்தில் அந்த மன்னர்களின் பெயரிலான ஆலயங்கள் இன்று வரலாற்றுப் புகழுடன் திகழ்கின்றன. உலகப் புகழ்பெற்ற மஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பிரசித்திபெற்ற ஆலயங்களைக் கொண்டுவிளங்குகிறது இணுவில் கிராமம்.இந்தநிலையில் அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில கற்றறிந்தோரால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக ஆர்ப்பாட்டக்கார்ர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் இணுவில் நிலத்தை மிட்பதற்குமான மௌன ஊர்வலம் இணுவில் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
இந்த மௌன ஊர்வலம் உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை அடைந்து அங்கு உடுவில் பிரதேச செயலரிடம் மனு கையளித்தலுடன் நிறைவுபெற்றது.