சபரிமலையில் போராட்டகாரர்களால் தொடர்ந்து தாக்கப்படும் பெண்கள்! – தொடரும் பதற்றம்!

0
175

பெண் ஒருவர் இன்று காலை சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றபோது, அங்கு கூடி இருந்த போராட்டக்காரர்கள் அவரை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் அந்த பெண்ணை சுற்றி வளைத்து நின்று பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டகாரர்களிடமிருந்து அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, இரண்டு பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அவர்களும் இதேபோல் சபரிமலைக்கு அடிவாரத்தில் கூடி நிற்கும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எந்த ஒரு போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல், போராட்டக்காரர்கள் யாராலும் கவனிக்கப்படாமல் பாலம்மா (47) என்ற பெண் 4 கி.மீ சென்றுவிட்டார். எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி போராட்டக்காரர்கள் அந்த பெண்ணின் வயதை அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்து சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் 10 முதல் 50 வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இதுவரை 8 பெண்கள் 19 கி.மீ வரை சென்று திரும்பியுள்ளனர். ஒருவரும் பம்பை மற்றும் நிலக்கல் பகுதியை தாண்ட முடியவில்லை. இதில் பத்திரிகையாளர் கவிதா மற்றும் சமூக ஆர்வலர் ரெஹானா உள்ளிட்ட இரண்டு பேர் மட்டும் சபரிமலை நுழைவு வாயிலில், 100 மீ தொலைவு வரை அருகே சென்று திரும்பியவர்கள்.

சபரிமலை கோவில் நடை மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் மற்ற நாட்களில் நடை அடைத்து வைக்கப்படும்.

இதனால், கோவில் நடை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து போராட்டக்காரர்கள் மிக உறுதியாக இருந்த வந்தனர். அவர்கள் சபரிமலை செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்வதும், பெண்களை தொந்தரவு செய்வதும், போலீஸ் முன்னிலையில் ஊடக வாகனங்களை தாக்குவதும் பத்திரிகையாளர்களை தாக்குவதும் நடந்து வந்தது. போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டும் செயல்திறன் அற்றதாக உள்ளது என பெண் ஒருவர் கூறினார்.

சபரிமலை கோவில்; பெரும் அளவில் மலை அடிவாரத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் போலீசார் போராட்டகாரர்களை அப்புறப்படுத்த பலமுறை முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் மீண்டும் நிலக்கல் மற்றும் பம்பா மலை அடிவாரத்தில் குழுமியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் சபரிமலைக்கு செல்லும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களின் அடையாள அட்டையை வாங்கி பார்த்து சோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து கேரள இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கூறுகையில், பெண்கள் கோயிலை அடைய எங்களால் உதவி செய்யமுடியும். ஆனால், தரிசனம் செய்வது அங்குள்ள அர்ச்சகர்களின் கையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று பலத்த பாதுகாப்பு வளையம் அமைத்து இரு பெண்களை கோவிலுக்கு அழைத்து சென்றோம். எனினும் கோயிலின் தலைமை அர்ச்சகரும், ‘பெண்கள் உள்ளே நுழைந்தால் கோயிலின் கதவைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விடுவோம்’ என்று அச்சுறுத்தியதால் எங்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இன்று ஆந்திர பிரதேசத்தை சார்ந்த 40 வயதுடைய இரண்டு பெண்கள் பம்பையிலிருந்து 200 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் வசந்தி 41, ஆதிசேஷி 42 உள்ளிட்ட இருவரும் சபரிமலையேற முயன்றனர். அப்போது போராட்டகாரர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டு திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால் வேறு வழியின்றி அந்த பெண்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here