தமிழீழ தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழீழ தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் போசோலை பிரான்ங்கோ தமிழச்சங்கத்தலைவர் திரு. நியூமன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத்தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உப பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வீரவேங்கை வரதன் , வீரவேங்கை ரமேஸ் ஆகிய இரண்டு மாவீரர்களை தாய் மண் விடுதலைக்கு உவந்தளித்த தாயார் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் சகோதரர்கள் உறவுகள் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்கொண்டு வணக்கம் செலுத்தினர்.
தமிழர் கலைபண்பாட்டுக்கழக நாடகக்கலைஞர்கள் காலத்தின் தேவை கருதிய இரண்டு நாடங்களை தந்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரான்சின் பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் பிரான்சு தேசத்தின் மிகமுக்கிய இடமாக கருதப்படும் மொனோக்கோ நகரத்தில் வாழும் தமிழீழ மக்களும், போசோலே, நீஸ் போன்ற அயல் கிராமங்களில் வாழும் தமிழீழ மக்கள் தான் ஓர் உயர்வான இடத்தில் இருந்தபோதும் தங்கள் தாய்நாட்டையும், தாய்மொழியையும் தாய்நாட்டின் விடுதலைக்கு உயிர்தந்தவர்களையும் நன்றி மறவாது அதற்கான பல்வேறு நெருக்கடிகளை அவ்வப்போது சந்தித்தித்து தொடர்ந்து உறுதியோடு செயற்பட்டுவருகின்றனர் என்றும் மாவீரர்கள் காலத்தால் சாகாதவர் என்றும் இந்த பூமிப்பந்தில் ஒரு தமிழன் உயிருடன் வாழும் வரை அவர்களை நினைத்து சுடர் ஏற்றப்படும் என்றும். அந்த வகையிலே தான் எமது மூன்று வயது, ஐந்து வயது பிஞ்சுக்குழந்தைகள் மாவீரர்களுக்கு சுடர்ஏற்றி வைத்து மக்கள் முன்னிலையில் மாவீரர்கள் பற்றிய உரையை தாய்மொழியில் மனனம் செய்து ஒப்புவிப்பதென்பது என்பது சாதாரணமாக எமது இனத்தை பார்க்க முடியாது என்று இந்த குழந்கைளை ஒவ்வொருவிடயத்திலும் தாய்மண்ணோடும் தாய்மொழியயோடு வளர்த்தெடுக்கின்ற பெற்றோர்கள், அனைத்து உணர்வுள்ள பெரியோர்களையும் நன்றியோடு கரம்பற்றி இந்நாளில் வணக்கம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார்.
பயங்கரவாதிகள் , தீவிரவாதிகள் என்றும் எமது உன்னதமான போராட்டத்தை சர்வதேசம் களங்கப்படுத்தியது இன்று அக்களங்கத்தைத் துடைக்க முன்வருகின்றது என்றும் இன்றைய மாவீரர் நாளில் இங்கு முதற்தவையாக தமிழீழ தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டுள்ளது. அது இங்கு வாழ் எமது தேசமக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தீவிலும் அதற்கு அருகே உள்ளதேசமாக இருக்கட்டும் தமிழீழ மக்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களால் நிம்மதியான தொரு ஆட்சியை அமைக்க முடியாது என்பதையே தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் காட்டி நிற்கின்றன.
ஆனால் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தொடர்ந்து அரசியல் , சனநாயக ரீதியில் தாம் வாழும் நாடுகளின் அரசுகளின் கதவுகளை தொடர்ந்து தட்டிய வண்ணமே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக நாடகக்கலைஞர்களான திரு. தயாநிதி, திரு. குணபாலன் , திரு. நாதன் அவர்கள்பிரதான பாத்திரம் ஏற்று தாயகத்தில் எமது போராளிகளும் மக்களும் படுகின்ற துன்பத்தை காட்டும் வகையில் வழங்கிய அவலம் என்ற நாடகம் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது.
போசோலே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தால் கோடை விடுமுறையில் நடாத்தியிருந்த விளையாட்டுப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடையங்கள் கிளையின் உப பொறுப்பாளர் திரு.அலெக்ஸ், திரு. மேத்தா ,கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்களாலும் மற்றும் போசோலே தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் மற்றும் ஆசிரியர்களால் மதிப்பளிக்கப்பட்டது.
மாவீரர் குடும்பங்களும் சகோதரர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். மாலை 7.00 மணிவரை மாவீரர் நினைவில் அனைவரும் திழைத்திருந்தனர். பாரிசில் (1000 கிலோ மீற்றர் ) தொலைவில் இருந்தும் குழந்கைள் , கலைஞர்கள் அங்குவாழ் தமிழீழ மக்களுடன் கலந்து சிறப்பாக மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.