உதடு நனைத்த ஒரு துளி தேநீரின் சுவை அறிந்தோர் கொழுந்துகள் பறித்துப் பறித்து கிழிந்துபோன அம்மக்களின் கரங்களின் வலியினை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு நியாயமான வேதனம் கிடைக்கவேண்டும் என போராட முன் வாருங்கள்!
சமூக வலைத்தள நண்பர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21.10.2018 அன்று ஞாயிறு காலை 9:30 மணிக்கு யாழ் பேருந்து நிலையத்தின் முன்பாக மேற்கொள்ள இருக்கும் இந்த போராட்டத்தில் இயலுமான அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
இது கட்சிகள் அமைப்புக்கள் சார்பிலானா போராட்டம் அல்ல சமூக வலைத்தள உறவுகளின் சமூக அக்கறையினை வெளிப்படுத்தும் போராட்டம். நீங்கள் நான் நாம் இணைந்து மேற்கொள்ளும் போராட்டம் எதிர்காலத்தில் நாம் ஒருமித்த சக்தியாக ஒன்றுபட்டு போராட வழிகளை ஏற்படுத்தும் போராட்டம். இதனை வெற்றிகொள்ளவைப்பது எமது கடமை. இயலுமான அனைவரும் போராட்டத்தில் பங்குகொண்டு மலையகத்தின் மீதான வடக்கின் கரிசனையினை வெளிப்படுத்திக்காட்டுவோம்.
காலமாய் பெருந்தோட்ட கம்பனிகளினாலும், தொழிற்சங்களினாலும், அரசியல்வாதிகளினாலும் மலையக மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வருகிறது. வெயில் மழை பனி குளிர் என்று இயற்கை இடர்களுக்கும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கும் மத்தியில் காலை தொடக்கம் மாலைவரை உதிரத்தினையும் உழைப்பினையும் கொடுக்கும் அம்மக்களுக்கு கிடைக்கும் கூலியோ ஒரு அலுவலக வாயில் காற்போனுக்கு கிடைக்கும் வேதனத்திலும் பாதியளவே. இது எவ்வளவு கொடூரமான சுரண்டல்.
இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் வறுமானம் பெற்றுத்தரும் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் அந்த அப்பாவி மக்கள் 30 நாட்களும் வேலை செய்தாலும் கிடைக்கும் சம்பளம் வெறும் 100 டாலர்களே. அட்டைகளை விடவும் மோசமாக அவர்களின் உழைப்பினை அரசும் கம்பனிகளும் அரசியல்வாதிகளும் உறிஞ்சுகின்றனர். அதற்கெதிராக நாமும் குரல் கொடுப்போம்
பல்லாயிரம் பெண்களின் உடல் உழைப்பு அவர்களின் இயலாமையினையும் இல்லாமையினையும் வைத்து திருடப்படுவதை கண்டிக்க நாம் ஒன்றிணைவோம். அவர்களின் வலிகளில் வேதனைகளில் பங்குகொள்வோம்.
உதடு நனைக்கும் ஒரு துளி தேநீரின் சுவையின் பின்னே ஓர் சமூகத்தின் உதிரமே இருக்கிறதென்பதை உணர்ந்துகொள்ளும் ஒவ்வொருவரும் வாருங்கள்….