நிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் செயலாளர் செ.கஜேந்திரன், மனிதஉ ரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன், யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவ்காந்த் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தவைர் கிருஸ்ணமேனன் உள்ளிட்டவர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது.
ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் நீதிக்குப்பதிலாக வெறும் மௌனத்தையே பதிலாக வழங்கிவருகின்றது.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வேளையில் கூட தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார்.அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயப்படுத்தப்பட்டிருந்தனர்.
பிபிசி தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய, உள்ளிட்ட வானொலிகள்,நாளிதழ்கள்,ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நிமலராஜன் படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த 14 வருடங்களிற்கு மேலாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையினை எதிர்பார்த்து கிடப்பிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.