காட்டு யானைகள் ஏறாவூர் நகருக்குள் ஊடுருவல்:மக்களிடையே அச்ச நிலை!

0
297
மட்டக்களப்பு – ஏறாவூர் வாவிக்கரையினூடாக காட்டு யானைகள் கூட்டம் நகருக்குள் பிரவேசிக்க முற்பட்டு வருவதால் கடந்த சில தினங்களாக ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் வசிக்கும் மக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
ஏறாவூர் வாவிக்கரைப் பிரதேசத்தை அண்டியே சிறுவர் பூங்கா, பாடசாலை, விளையாட்டு மைதானம், கலாச்சார மண்டபம், சமூக சேவைகள் அலுவலகம், பிரதேச செயலகம், மூத்தோர் பொழுதுபோக்குப் பூங்கா, பள்ளிவாசல்கள்  உட்பட இன்னும் பொதுமக்களின் வீடுகளும் அமைந்துள்ளன.
முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வாவியைக் கடந்து கரையோரப் பிரதேசத்துக்குள் 6 யானைகளைக் கொண்ட காட்டு யானைகள் கூட்டம்  ஊடருவியதாகவும் பகல்பொழுதானபடியால் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடி அந்த யானைகளை விரட்டியடித்ததாகவும் ஏறாவூர் நகர மேயர்  தெரிவித்தார்.
அவ்வேளையில் காட்டு யானைகள் கூட்டத்தை விட்டு தனியே அகன்று சென்ற ஒரு யானை மூர்க்கத்துடன் பிரதேச செயலக வீதியில் முன்னேறி அவ்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை தும்பிக்கையால் சுழற்றியடித்து வீசி எறிந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏறாவூர் வாவியை அண்டிய கரையோரமெங்கிலும் வசிக்கும் பொதுமக்கள் தினமும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் காலங்கழிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் ஊடுருவலைத் தடுக்க பட்டாசுகளைக் கொளுத்தியும், அலாரம்களை ஒலிக்க விட்டும், அதிக பிரகாசமுள்ள வெளிச்சத்தைப் பாய்ச்சியும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் நகர பிரவேசத்தின் பின்னர் வாவிக்கரையோர பொழுபோக்குப் பூங்காவைப் பயன்படுத்தும் முதியோரும், சிறுவர்களும் பொதுமக்களும் என அனைத்து தரப்பினரும் நேரகாலத்துடன் அவ்விடத்தைக் காலி செய்து அகன்று விடுவதாக பிரதேச வாசிகள்  தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here