கல்வியில் காலடி பதிப்பதற்கு பெரியோரின் நல்லாசி அவசியம்!

0
589

நவராத்திரி விரதம் நேற்று 18 ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து மறுநாளான இன்று 19ம் திகதி விஜயதசமி அனுஷ்டிக்கப்படுகிறது.

இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி; – வெற்றி தருகிற நாள்.குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள்.வித்தியாரம்பம்,ஏடு தொடக்குதல் என்றெல்லாம் இதனைக் குறிப்பிடுவர்.

இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது இந்துக்களின் நம்பிக்ைக. இதனால்தான் சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்னதாக, நல்ல நேரத்தில் பெரியோரின் ஆசியுடன் முதல் ஏடு தொடக்கி வைப்பர்.

‘பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கி விடு’ என்பதற்கு எதுவாக ஏடு தொடங்கும் போது வாழை இலையில் அரிசியினைப் பரப்பி அதன் மீது முதன் முதலாக குழந்தையின் கையைப் பிடித்து விரலால் எழுதி விடுவர். இதன் போது சிறந்த பேச்சாற்றலும் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவை என்பதால் அன்றைய தினம் நாக்கில் தர்ப்பைப் புல்லால் தேன் ஒரு துளியினை தொட்டு குழந்தையின் நாக்கில் வைப்பதும் உண்டு.

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவது இயற்கை. தன் குழந்தை பாடசாலைக்குச் செல்லும் அல்லது கல்வி கற்கத் தொடங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவதும் இயல்பு. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.

விஜயதசமியன்று குழந்தைகளை புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை கற்பதற்காகவும் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவுக்கு சிறப்புத் தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையைப் பயிலுவார்கள்.

இந்த மங்கலமான விஜயதசமியன்றுதான் சிறு குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை கோயில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோயில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்கத் தேவையில்லை. வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம். அறிவை கொடுக்கும் குருவை சிறப்பிப்பதாகவும் இந்நிகழ்வு நடக்கிறது. குழந்தையை வீட்டில் அப்பா,பாட்டன் அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும்.

குரு குழந்தையின் சுட்டுவிரலைப் பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய்மொழியின் எழுத்தை எழுத வைப்பார்.எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் வித்தியாரம்பம் என்பது இந்துக்களின் நம்பிக்ைக நிறைந்த பண்பாட்டு பாரம்பரிய நிகழ்ச்சியாக தொடர்ந்து வருகிறது.

ஆர். நடராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here