சிங்கப்பூரின் நிறுவனரான மறைந்த பிரதமர் லீ குவான் யூவின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.
கடந்த திங்கட்கிழமை தனது 91அவது வயதில் மரணமடைந்த லீ குவான் யூவின் இறுதி ஊர்வலம் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஆரம்பித்து, தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் முடிவடைந்தது. 15 கிலோமீற்றர் கொண்ட இந்த இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்குகளிலும் மழையையும் பொருட்படுத்தாமல் கூடி நின்றனர்.
லீயின் உடலானது சிவப்பு வெள்ளை நிறம் கொண்ட சிங்கப்பூர் கொடியால் மூடப்பட்டு பாராளுமன்ற வளாகத்தில் இருந்து இராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தின் முன்பு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் அணிவகுத்து சென்றனர். பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலமானது பிரதான பகுதிகளை கடந்து சென்றது. இறுதியாக தேசிய பல்கலைகழக வளாகத்தில் நிறைவடைந்தது.
லீ குவான் யு+வின் இறுதிக் கிரியையில் பல உலகத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இறுதிக் கிரியை நிகழ்வுகள் நிறைவடைந்ததும் சிங்கபூரின் நீண்டகால பிரதமரின் உடல் தனிப்பட்ட குடும்ப இறுதிச் சடங்கில் தகனம் செய்யப்பட்டது.
லீ குவான் யு+வின் உடலுக்கு கடந்த ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் முன்னாள் பிரதமரின் உடல் பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டபோது சுமார் 450,000க்கும் அதிகமான மக்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் அதிக உணர்வுபூர்வமான நிகழ்வுகள் இடம்பெறுவது அரிதானதாகவே கருதப்படுகிறது. லீ குவான் யூநிறுவிய சிங்கபூர் என்ற நாடு சுவிங்கம் மெல்லுவதற்குக் கூட தடையுள்ள, ஒருசில குற்றச்சாட்டுகளுக்கு பிரம்படி தண்டனை வழங்கும் கடுமையான சமூக ஒழுங்குகள் கொண்ட உலகின் செல்வந்த வர்த்தக மையமாக மாறியுள்ளது.