கச்சதீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதாக கரைதிரும்பிய மீனவர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்படையனரின் கைது நடவடிக்கை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் கடந்த 6 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பின்னர் நேற்றுக் காலை இராமேஸ்வரத்திலிருந்து 400ற்கும் குறைவான விசைபடகுகளில் மீன்பிடி அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
பகல் 11 மணியளவில் இவர்களை கச்சத்தீவு செல்லும் வழியிலேயே தடுத்துநிறுத்திய 10 ற்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
உயிர்பயத்தினால் நாலாபுறமும் சிதறியோடியவர்கள் அதிகாலை வரை கடலில் வலை வீச முடியாமல் அவதியுற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய கடல்பகுதிக்குள் மீன்பிடிக்கலாம் என்றால் வெளி மாவட்ட மீனவர்கள் அதிக அளவில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எரிபொருளுக்கு கூட மீன்வரத்து இன்றி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரை திரும்பியுள்ளனர். படகு ஒன்றிற்குசராசரி ரூபா 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள் இனிமேல் கச்சைதீவு பகுதிக்குள் மீன்பிடிக்கும் எண்ணத்தையே விடவேண்டும் எனவும் மீறினால் உங்களது இழுவைபடகுகள் திரும்பிச்செல்லாது எனவும் கடுமையாக கடற்படையினர் எச்சரித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மண்டபம் பகுதியில் இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டு தப்பித்தால் போதும் என கரை திரும்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தநிலை தொடர்ந்தால் மீனவர்களின் இனமே அழிந்தவிடும் அபாயம் எழுந்துள்ளதாகவும் பாரம்பரிய கடல்பகுதியில் இழந்தமீன்பிடி உரிமையை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.